‘உன் கண்களில் மருந்து தடவு’
ஆசியா மைனரிலிருந்த லவோதிக்கேயாவை சேர்ந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையாருக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த மருத்துவக் குறிப்பே இது.
‘நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் மருந்து வாங்கித் தடவு’ என்று இயேசு கூறினார். இது சொல்லர்த்தமான கண் வியாதி அல்ல, ஆனால் சிகிச்சை தேவைப்படும் ஆன்மீக குருட்டுத்தன்மை. பொருளாதாரத்தில் செழித்தோங்கிய லவோதிக்கேயா பட்டணத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களையும் பொருளாசை தொற்றிக்கொண்டது. அதனால் அவர்கள் தங்களுடைய உண்மையான ஆன்மீக தேவைகளை அலட்சியம் செய்து வந்தார்கள்.
இதுவே அவர்கள் பார்வையிழந்ததற்கு காரணமென விளக்குகையில், இயேசு இவ்வாறு சொன்னார்: ‘நான் செல்வமுள்ளவன், வளமிக்கவன் ஆகிவிட்டேன். எனக்குக் குறை ஒன்றுமில்லை, என்று நீ சொல்கிறாய். உன் நிலையோ இழிவானது, இரங்கத்தக்கது, நீ வறியவன், குருடன், ஆடையற்றவன். இதை நீ உணர்வதில்லை.’ அவர்களே இதை அறியாதபோதிலும், அந்த சபையிலிருந்த அங்கத்தினர்களுக்கு குணமாக்கும் ‘கண் மருந்து’ தேவைப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் போதனை மற்றும் சிட்சைக்கு அடிபணிவதால் மாத்திரமே அதைப் பெற முடியும். ‘என்னிடமிருந்து வாங்கு’ என இயேசு கூறினார்.—திருவெளிப்பாடு [வெளிப்படுத்துதல்] 3:17, 18, கத்.பை.
லவோதிக்கேய கிறிஸ்தவர்களைப் போலவே இன்றைய உண்மை கிறிஸ்தவர்களும் தாங்கள் வாழ்கிற பொருளாசைமிக்க, இன்பத்தையே மையமாக கொண்ட சூழலால் அளவுக்கு அதிகமாக—ஒருவேளை தங்களை அறியாமலேயே—பாதிக்கப்படாதபடி கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான ஆவிக்குரிய நோக்கை காத்துக்கொள்வதற்குரிய மருத்துவக் குறிப்பு பின்வரும் புத்திமதியில் கொடுக்கப்பட்டுள்ளது: ‘நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களுக்கு [இயேசுவிடமிருந்து] மருந்து வாங்கித் தடவு.’
இந்தக் ‘கண் மருந்தை’ வாங்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்க குறிப்பு. இதில் விலை உட்பட்டுள்ளது. கடவுளுடைய வார்த்தையை படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நேரம் செலவழிக்க வேண்டும். இந்த வார்த்தை “தூய்மையானது; [ஆவிக்குரிய] கண்களுக்கு ஒளியூட்டுவது” என சங்கீதக்காரன் உறுதியளிக்கிறார்.—சங்கீதங்கள் 18:8, கத்.பை.