நற்கிரியைகளால் கடவுளுக்கு மகிமை
நன்னடத்தையாலும் சிறந்த செயல்களாலும் உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள். (1 பேதுரு 2:12) சமீப வருடங்களில் இத்தாலியில் நிகழ்ந்த சம்பவங்கள் இதற்கு சான்றளிக்கின்றன.
செப்டம்பர் 1997-ல், மார்ஷ் மற்றும் அம்ப்ரியாவின் பல்வேறு பகுதிகளை தாக்கிய பலத்த நிலநடுக்கம் கிட்டத்தட்ட 90,000 வீடுகளை சேதப்படுத்தியது. சக விசுவாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளின் தொகுதிகள் உடனடி உதவி அளித்தன. ட்ரெய்லர்கள், தூங்குவதற்கு பயன்படுத்தும் பைகள், ஸ்டோவ்கள், ஜெனரேட்டர்கள், இன்னும் பல தேவையான பொருட்கள் அளிக்கப்பட்டன. இந்த நிவாரண பணிகள் கவனிக்கப்படாமல் போகவில்லை.
இல் சென்ட்ரோ என்ற செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்தது: “பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி பொருள்களுடன் முதல் முதலாக வந்தது [டிராமோ மாகாணத்திலுள்ள] ரோஸெட்டோவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளே . . . ஜெபத்திற்காக அவ்வப்போது ஒன்றுகூடுவது மட்டுமல்லாமல், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பவர்கள் நடைமுறையான விதத்திலும் செயல்படுகிறார்கள்; எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.”
கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான நாச்சேரா உம்ப்ராவின் மேயர், சாட்சிகளுக்கு இவ்வாறு எழுதினார்: “நாச்சேரா மக்களுக்கு நீங்கள் அளித்த உதவிக்காக என் சார்பில் உங்களுக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன். அந்நகரிலுள்ள எல்லாருமே இப்படி சொல்ல விரும்புவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.” மேலுமாக, காங்ரேகாட்ஸியோனே கிறிஸ்டியானா டே டெஸ்டிமோனி டி ஷேயோவாவுக்கு (யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபைக்கு) உள்துறை அமைச்சகம் ஒரு நன்மதிப்பு சான்றிதழையும் பதக்கத்தையும் வழங்கியது; “அம்ப்ரியா மற்றும் மார்ஷ் பகுதிகளில் ஏற்பட்ட அவசர நிலைக்கு கைகொடுக்கும் வேலைக்கும் ஊக்கமான உழைப்புக்கும் சான்றாக” இவை வழங்கப்பட்டன.
2000-ன் அக்டோபர் மாதத்தில், ப்யேமோன்டே பகுதியில் வெள்ளப்பெருக்கு பேரழிவை ஏற்படுத்தியது. மீண்டும் சாட்சிகள் நிவாரண பணிகளில் உடனடியாக இறங்கினார்கள். இந்த நற்செயல்களும் கவனத்திலிருந்து தப்பவில்லை. “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ப்யேமோன்டேயின் மக்களுக்கு மனமுவந்து உதவிய அருஞ்செயலுக்காக” ப்யேமோன்டே பகுதி ஒரு கேடயத்தை பரிசாக அளித்தது.
இயேசு கிறிஸ்து தம் சீஷர்களுக்கு பின்வருமாறு போதித்தார்: “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:16) தங்கள் அக்கம்பக்கத்தாருக்கு ஆவிக்குரிய வகையிலும் மற்ற வழிகளிலும் உதவும் “நற்கிரியைகளை” செய்வதன்மூலம் யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுடன் கடவுளை மகிமைப்படுத்துகிறார்கள், தங்களை அல்ல.