வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உறவினர்களுக்குள் திருமணம் செய்வதன் சம்பந்தமாக நியாயப்பிரமாணத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை இன்று கிறிஸ்தவர்கள் எந்தளவுக்கு பின்பற்ற வேண்டும்?
இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த நியாயப்பிரமாணம் திருமண சடங்குகளையும் அது சம்பந்தமான முறைகளையும் பற்றி விலாவாரியாக சொல்வதில்லை. ஆனால் சில உறவுமுறை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. உதாரணமாக, லேவியராகமம் 18:6-20-ல், ‘நெருங்கின இனத்தில்’ யார் யாரையெல்லாம் திருமணம் செய்யக்கூடாது என்ற பட்டியல் காணப்படுகிறது. இரத்த பந்தங்களில் யார் யாருடன் பாலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் குறித்து அது அதிக விவரமாக குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் அல்லது அதன் சட்டங்களின்கீழ் இல்லை என்பது உண்மைதான். (எபேசியர் 2:15; கொலோசெயர் 2:14) ஆனால், யாரை திருமணம் செய்யலாம் என்ற இந்த விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியதில்லை என்பதை இது அர்த்தப்படுத்தாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, உறவினர்களுக்குள் திருமணம் செய்வதில் அரசாங்க சட்டங்கள் உட்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் தாங்கள் வாழும் தேசத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறார்கள். (மத்தேயு 22:21; ரோமர் 13:1) இந்தச் சட்டங்கள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. இது போன்ற நவீன நாளைய சட்டங்கள் பல மரபணு விஷயங்களை மனதிற்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. நெருங்கிய உறவினர்கள் திருமணம் செய்துகொண்டால், பிறக்கும் குழந்தைகள் மரபணு குறைபாடுகளுடனும் நோயுடனும் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பது அனைவரும் தெரிந்த உண்மை. இந்தக் காரணத்திற்காகவும் ‘மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்’ என்பதற்காகவும் திருமணம் செய்யும் கிறிஸ்தவர்கள் உள்ளூர் திருமண சட்டங்களுக்கு கீழ்ப்படிந்திருக்கிறார்கள்.
அதோடு, ஒருவர் வாழும் சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளப்படும், எது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதும் இருக்கிறது. நெருங்கிய உறவினரை திருமணம் செய்வதை தடை செய்யும் சட்டங்களும் பழக்கங்களும் எல்லா கலாச்சாரங்களிலும் இருக்கின்றன. இவை முறைதகா உறவுகள் என்று தடை செய்யப்படுகின்றன. எந்தெந்த உறவினர்களை திருமணம் செய்யக்கூடாது என்பது பல்வேறு கலாச்சாரங்களில் வித்தியாசப்பட்டாலும் “பொதுவாக சொன்னால், இரண்டுபேருக்கும் இடையே மரபணு உறவு எந்தளவுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அவர்களிடையே பாலுறவு கூடவே கூடாது என்று தடை செய்யப்படுகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது” என்று தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. ஆகவே முறைதகாத உறவு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமுதாயத்தின் பழக்கங்களை அல்லது நியாயமான உணர்வுகளை கிறிஸ்தவர்கள் அடியோடு அசட்டை செய்து கிறிஸ்தவ சபைக்கோ கடவுளுடைய பெயருக்கோ நிந்தையைக் கொண்டுவர மாட்டார்கள்.—2 கொரிந்தியர் 6:3.
கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மனசாட்சியையும் நாம் அசட்டை செய்யக்கூடாது. எது சரி எது தவறு, எது நல்லது எது கெட்டது என்ற உணர்வோடு எல்லாரும் பிறந்திருக்கிறார்கள். (ரோமர் 2:15) சாதாரணமாக எது இயல்பானது, எது சரியானது, எது இயற்கைக்கு மாறானது, எது அருவருப்பானது என்பதை அவர்களுடைய மனசாட்சி உணர்த்துகிறது, வக்கிரமான பழக்கவழக்கங்களால் மனசாட்சி திரிக்கப்பட்டிருந்தால் அல்லது மரத்துப்போயிருந்தால் மட்டுமே அது பேசாது. நெருங்கிய இரத்த பந்தங்களை திருமணம் செய்யக்கூடாது என்ற கட்டளையை யெகோவா இஸ்ரவேலருக்கு கொடுத்தபோது இந்த உண்மையை குறிப்பிட்டார். “நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும் [இருங்கள்]” என்பதாக வாசிக்கிறோம். (லேவியராகமம் 18:3) கிறிஸ்தவர்களுக்கு பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி மிகவும் மதிப்புள்ளது, எது சரி எது தவறு என்பது சம்பந்தமாக தேசங்களுடைய தவறான கருத்துக்கள் அதை கெடுக்க அவர்கள் அனுமதிக்கிறதில்லை.—எபேசியர் 4:17-19.
அப்படியென்றால், நாம் என்ன முடிவுக்கு வருவோம்? கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லாவிட்டாலும், நெருங்கிய உறவினர்கள்—அப்பா மகள், அம்மா மகன், சகோதரன் சகோதரி—திருமணம் செய்வது கிறிஸ்தவ சமுதாயத்தில் முழுமையாக தடை செய்யப்படுகிறது.a இந்த உறவு முறைகள் பெரிதாகும்போது, திருமணம் சம்பந்தமாக சட்டப்பூர்வ விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், சமுதாயமும் கலாச்சாரமும் ஏற்றுக்கொள்ளும் தராதரங்களை மதிக்க வேண்டும் என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். “திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்” என்ற பைபிளின் கட்டளைக்கு இசைவாக நடப்பதற்கு இவை அனைத்தையும் நாம் கவனமாக கருத்தில்கொள்ள வேண்டும்.—எபிரெயர் 13:4, பொ.மொ.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தகவலின்பேரில், “முறையற்ற திருமணங்கள்—கிறிஸ்தவர்கள் இவற்றை எப்படி கருத வேண்டும்?” (ஆங்கிலம்) என்ற கட்டுரையை காவற்கோபுரம், 1978, மார்ச் 15, பக்கங்கள் 25-6-ல் காண்க.