அவர்கள் வயதுக்கு அவர்கள் ஞானிகளே
“பெரியவர்களுக்கு ஞானமுண்டு, பிள்ளைகளுக்கும் அவர்களுடைய வயதுக்கு தகுந்த ஞானமுண்டு” என்கிறது நைஜீரியா நாட்டு பழமொழி. இது உண்மை என்று தன் அனுபவத்தை வைத்து சொல்கிறார் எட்வின் என்ற பெயருள்ள நைஜீரியாவிலுள்ள ஒரு கிறிஸ்தவ மூப்பர்.
ஒரு நாள் வீட்டில் தன் டெஸ்குக்கு கீழே ஒரு உலோக பெட்டியை எட்வின் கவனித்தார்.
“இது யாருடையது?” என்று எட்வின் தன் மூன்று பிள்ளைகளைப் பார்த்துக் கேட்டார்.
“அது என்னோடது” என்றான் எட்டு வயது இம்மானுவெல். மேலே ஒரு துளையிடப்பட்டிருந்த 12 சதுர சென்டிமீட்டர் அளவுடைய இந்தத் துருப்பிடித்த பெட்டி, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்காக நன்கொடைகளை சேர்த்து வைப்பதற்காக என்று படபடவென சொன்னான். “நான் ராஜ்ய மன்றத்துக்கு தினமும் போக முடியாததாலே, நொறுக்குத்தீனி ஏதாவது வாங்கிக்கொள்ள கிடைக்கும் பணத்தை செலவு செய்யாம இருக்கிறப்ப அதை இந்தப் பெட்டிலே போட்றுவேன்” என்று அவன் விளக்கமாக சொன்னான்.
வருடந்தோறும் நடைபெறும் மாவட்ட மாநாட்டிற்குச் செல்ல பணத்தை சேமித்து வைப்பதற்கு இம்மானுவெலின் அப்பா ஒரு பெட்டியை வைத்திருந்தார். குடும்பத்திற்கு அவசரமாக பணம் தேவைப்பட்ட சமயத்தில் அதிலிருந்த பணத்தை எடுத்து செலவழித்துவிட்டார்கள். ஆகவே இம்மானுவெல் தன்னுடைய நன்கொடை பணத்தை வேறு எதற்காகவும் செலவழித்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு பழைய டின்னை எடுத்துக்கொண்டு ஒரு வெல்டரிடம் போய் அதை மூடித் தரும்படி கேட்டான். அது எதற்காக என்பதை வெல்டர் கேட்டு தெரிந்துகொண்டபோது தேவையில்லாத உலோகத் துண்டுகளை வைத்து ஒரு பெட்டியை இம்மானுவெலுக்கு செய்துகொடுத்தார். இம்மானுவெலின் ஐந்து வயது தம்பி மைக்கல் தனக்கும் ஒரு பெட்டி வேண்டுமென்று கேட்டான்.
பிள்ளைகள் செய்த காரியத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட எட்வின் எதற்காக பெட்டிகளை செய்தார்கள் என்று அவர்களிடம் கேட்டார். “நான் நன்கொடை தர ஆசைப்படறேன்” என்று மைக்கல் பதிலளித்தான்.
இவ்வளவு நாட்களாக பெற்றோருக்குத் தெரியாமலே, இம்மானுவெல், மைக்கல், ஒன்பது வயதுள்ள அவர்களுடைய அக்கா யூசே ஆகிய மூன்று பேரும் தங்களுக்குக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை சேமித்து அந்தப் பெட்டிகளில் போட்டு வந்திருக்கிறார்கள். இந்த ஐடியா அவர்களுக்கு எப்படி தோன்றியது? பிள்ளைகளால் கையில் பணத்தை பிடித்துக்கொள்ள முடிந்த சமயத்திலிருந்தே, ராஜ்ய மன்றத்தில் நன்கொடை பெட்டியில் ஏதாவது பணத்தைப்போட பெற்றோர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பிள்ளைகள் பாடத்தை நன்றாகவே கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
பெட்டிகள் நிரம்பியபின் அவற்றை வெட்டி திறந்தார்கள். அவர்கள் சேமித்திருந்த மொத்த பணம் 3.13 அமெரிக்க டாலர். இந்த நாட்டில் வருடாந்தர சராசரி வருமானமே சில நூறு டாலராக இருக்கையில், இது ஒன்றும் சிறிய தொகை இல்லை. இப்படிப்பட்ட மனமுவந்த நன்கொடைகளின் உதவியோடுதான் 235 நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை செய்யப்பட்டு வருகிறது.