“வலிக்கும், கொஞ்சம் பொறுத்துக்கொள்”
இவ்வாறு சொல்வதை எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? அவசியமான சிகிச்சை அளிக்கும் முன்பு ஒரு டாக்டரோ, நர்ஸோ இவ்வாறு ஒருவேளை சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.
வலிக்குப் பயந்து அந்தச் சிகிச்சையை ஏற்க மறுத்திருக்க மாட்டீர்கள். மாறாக, அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மையை நினைத்து அந்த வலியை பொறுத்திருப்பீர்கள். இன்னும் மோசமான நிலைமைகளில், வலிமிகுந்த சிகிச்சையை ஏற்பதும் மறுப்பதும் வாழ்வையோ சாவையோ குறிக்கலாம்.
எப்பொழுதும் டாக்டரின் கவனிப்பு நமக்கு தேவைப்படாதபோதிலும் அபூரணர்களாக இருப்பதால், சிட்சை, அல்லது திருத்தம் நமக்குத் தேவை; அவ்வாறு கொடுக்கப்படுபவை சில சமயங்களில் வேதனை தரலாம். (எரேமியா 10:23) பிள்ளைகளுக்கு இதன் அவசியத்தை வலியுறுத்துவதாய் பைபிள் சொல்வதாவது: “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.”—நீதிமொழிகள் 22:15.
இந்த சந்தர்ப்பத்தில், பிரம்பு எனப்படுவது, பெற்றோருக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அடையாளமாக உள்ளது. சிட்சை அதிகப்படியான பிள்ளைகளுக்கு எட்டிக்காய் போல் கசக்கும் என்பது உண்மையே. அதிலும் ஏதாவது தண்டனை கொடுக்கப்பட்டாலோ, அவர்கள் வெறுப்படையலாம். என்றாலும், ஞானமுள்ள அன்பான பெற்றோர், பிள்ளைகளின் அப்போதைய வேதனையைவிட, அவர்களின் எதிர்கால நன்மைகளையே எண்ணிப் பார்க்கின்றனர். இவ்விஷயத்தில் கடவுளுடைய வார்த்தை கூறுவது வாஸ்தவம்தான் என்பது கிறிஸ்தவ பெற்றோருக்குத் தெரிந்ததே; அது கூறுவதாவது: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”—எபிரெயர் 12:11; நீதிமொழிகள் 13:24.
பிள்ளைகளுக்கு மட்டுமே சிட்சை தேவையானது என்று சொல்லிவிட முடியாது. அது பெரியவர்களுக்கும் தேவை. “புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்” என்று பைபிள் சொல்லும்போது அது பெரியவர்களிடமே சொல்லுகிறது. (நீதிமொழிகள் 4:13) ஆம், ஞானமானவர்கள்—சிறியோரும் பெரியோரும்—கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையில் கொடுக்கப்படும் சிட்சையை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள்; ஏனெனில் அது காலப்போக்கில் அவர்களுடைய உயிரைக் காக்கும்.
[பக்கம் 32-ன் படக்குறிப்பு]
உங்களை சந்திக்க விரும்புகிறீர்களா?
கஷ்டம் நிறைந்த இவ்வுலகிலும் நீங்கள் மகிழ்ச்சியைப் பெற முடியும். அதற்காக கடவுளையும் அவருடைய அரசாங்கத்தையும் நமக்காக அவர் வைத்திருக்கும் எதிர்காலத்தையும் பற்றி பைபிள் சொல்வதை திருத்தமாக அறிந்துகொள்ள வேண்டும். கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் அல்லது பைபிளை இலவசமாய் கற்றுக்கொடுக்க யாராவது உங்களை சந்திக்க விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எழுதுங்கள்.