“அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்”
பைபிள் நாடுகளில் உஷ்ணமான சீதோஷணம் நிலவியதால், செம்மறியாடுகளுக்கு அன்றாடம் தண்ணீர் தேவை. ஆகவே, மந்தைக்கு தண்ணீர் காட்டுவது மேய்ப்பனுடைய முக்கியமான வேலைகளில் ஒன்றாகும். ஆடுகள் தண்ணீர் குடிப்பதற்காக மேய்ப்பர்கள் சிலசமயங்களில் கிணற்றிலிருந்து நீர் இறைத்து தொட்டிகளில் ஊற்றுகின்றனர். (ஆதியாகமம் 29:1-3) ஆனால், முக்கியமாக மழை காலத்தில், சிற்றோடைகள் மற்றும் ஆறுகளைச் சுற்றியுள்ள இடங்கள் நீர்வளம் பொருந்தியவையாக இருக்கும்.—சங்கீதம் 23:2.
மந்தைக்கு தண்ணீரும் மேய்ச்சலுக்கு ஏற்ற பசும் புல்வெளிகளும் எங்கே இருக்கும் என்பதை ஒரு நல்ல மேய்ப்பன் தெரிந்திருக்க வேண்டும். ஓர் இடத்தைப் பற்றி அத்துப்படியாக அறிந்து வைத்திருப்பது மந்தையின் பிழைப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. யூதேய மலைகளில் அநேக ஆண்டுகள் செம்மறியாடுகளை மேய்த்து வந்தவர் தாவீது; கடவுளுடைய ஆவிக்குரிய வழிநடத்துதலை, ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை புல்வெளி மிக்க பகுதிக்கும் ஜீவ தண்ணீர்கள் அண்டைக்கும் அழைத்துச் செல்வதற்கு அவர் ஒப்பிட்டார். “அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்” என தாவீது கூறினார்.—சங்கீதம் 23:1-3.
பல ஆண்டுகளுக்குப்பின், தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் மூலம் யெகோவா இதுபோன்ற ஓர் உதாரணத்தைப் பயன்படுத்தினார். மேய்ப்பன் செம்மறியாடுகளை கூட்டிச் சேர்ப்பது போல பல தேசங்களுக்கு சிதறுண்டுபோன தமது ஜனங்களை ஒன்றாக கூட்டிச் சேர்ப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார். “அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் . . . மேய்ப்பேன்” என உறுதியளித்தார்.—எசேக்கியேல் 34:13, பொ.மொ.
ஆவிக்குரிய தண்ணீர் வழங்குவதைக் குறித்ததிலும் யெகோவா தேவன் ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார். கடவுளுடைய சிங்காசனத்திலிருந்து பாய்ந்தோடி வருகிற ‘ஜீவத் தண்ணீருள்ள நதியைப்’ பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் வர்ணிக்கிறது. (வெளிப்படுத்துதல் 22:1) இந்த நதியின் தண்ணீரை பருகும்படியான அழைப்பு எல்லா மக்களுக்கும் விடுக்கப்படுகிறது. “விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்.”—வெளிப்படுத்துதல் 22:17.
அடையாள அர்த்தமுடைய இந்த ஜீவத் தண்ணீர், நித்திய ஜீவனுக்காக கடவுள் செய்திருக்கும் ஏற்பாடுகளைக் குறிக்கிறது. ‘ஒன்றான மெய்த் தேவனையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை அடைவதன்’ மூலம் யாரும் இத்தகைய தண்ணீரை பருக ஆரம்பிக்கலாம்.—யோவான் 17:3.