கொல்லப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு நினைவு அஞ்சலி
மார்ச் 7, 2002-ல் மேற்கு ஹங்கேரியிலுள்ள கூர்மென்ட் நகரில் ஒரு நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்டது. 1945-ம் ஆண்டு நாஸி படையினரால் கொல்லப்பட்ட யெகோவாவின் சாட்சிகளில் மூவரின் உயிர்த்தியாகத்தை அந்தக் கல்வெட்டு பறைசாற்றுகிறது.
ஹுன்யாடீ சாலையில்—பகிரங்கமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட சாலையில்—தற்போதுள்ள தீயணைப்புத் துறை தலைமையகத்தின் சுவற்றில் இந்தக் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. ‘மார்ச் 1945-ல் இராணுவத்தில் சேர மறுத்ததால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆன்டால் ஹுனிக் (1911-1945), பெர்டாலான் ஸாபா (1921-1945), யானாஷ் ஷான்டார் (1923-1945), யெகோவாவின் சாட்சிகள், 2002’ என்று பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு அவர்கள் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. ஏன் இந்தக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள்? ஹங்கேரி செய்தித்தாள் வாஷ்னபெ இவ்வாறு விளக்குகிறது: “ஜெர்மனியில் ஹிட்லர் பதவி ஏற்ற பின்னர், யூதர்கள் மட்டுமல்ல உண்மையுள்ள யெகோவாவின் சாட்சிகளும் குறி வைக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் மத நம்பிக்கையை விட்டுக் கொடுக்காதிருந்தால் கொடிய துன்புறுத்துதலுக்கும் சித்திரவதைக்கும் ஆளாக வேண்டியிருந்தது. சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டு மடியவும் வேண்டியிருந்தது. . . . மார்ச் 1945-ல் ஹங்கேரியின் மேற்கத்திய பகுதிகளில் பயங்கரமான கொலை வெறியாட்டம் தலைதூக்கியிருந்தது. . . . அச்சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளும் நாடு கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.”
இந்தக் கல்வெட்டின் திறப்பு விழா இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் முதற்பாகம் பாட்யானி மாளிகையில் உள்ள அரங்கத்தில் நடந்தது. புடாபெஸ்ட்டில் உள்ள படுகொலைத் தகவல் மையத்தின் தலைவரான பேராசிரியர் சாபோட்ச் சீடா, மனித உரிமைகள், சிறுபான்மையர் மற்றும் மத நடவடிக்கைகளைக் கவனிக்கும் பாராளுமன்றக் குழு அங்கத்தினர் டோநாச், தற்போது அந்நகரத்தின் சரித்திராசிரியரும் நடந்த கொலைகளுக்கு கண்கண்ட சாட்சியுமான கல்மன் கோம்யாச்சீ ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள். அங்கே கூடியிருந்த 500-க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்திற்காக, நகரத்தின் மறுகோடிக்கு நடந்து சென்றனர். அங்கே, கூர்மென்ட் நகர மேயர் யோசெஃப் ஹோன்ஃபீ அந்தக் கல்வெட்டை திறந்து வைத்தார்.
யானாஷ் ஷான்டார் எழுதிய கடைசி லெட்டரில் தன் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தனக்காக துக்கப்படக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். “‘நீ மரணபரியந்தம் உண்மையாயிரு’ என்று யோவான் எழுதிய வெளிப்படுத்துதல் புத்தகத்தின் 2-வது அதிகாரம் 10-வது வசனம் எப்போதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. . . . அங்கிருக்கும் என் அன்பு உள்ளங்கள் எனக்காக வருந்தக் கூடாது என்று சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் நான் சத்தியத்திற்காக மரிக்கிறேன், ஒரு குற்றவாளியாக அல்ல” என்று அதில் எழுதியிருந்தார்.
[பக்கம் 32-ன் படம்]
பெர்டாலான் ஸாபா
[பக்கம் 32-ன் படம்]
ஆன்டால் ஹுனிக்
[பக்கம் 32-ன் படம்]
யானாஷ் ஷான்டார்