உண்மைத்தன்மை—நல்லதுதான், ஆனால் அது மட்டும் போதுமா?
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்மையுடன் நடந்துகொள்வது நிஜமாகவே விரும்பத்தக்கதா? “உண்மை” என்ற வார்த்தைக்கு பாசாங்கு அல்லது மாய்மாலத்திலிருந்து விலகியிருப்பது, நேர்மை, நாணயம், கபடமின்மை என்பதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. மற்றவர்களோடு நல்ல உறவுகளை நிலைநாட்டுவதற்கு இந்தப் பண்பு பயனுள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு புத்தி சொன்னார்: “சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ் செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:22) இப்படி உண்மையுடன் வேலை செய்பவரை யார்தான் வேலைக்கு வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்? இன்று, உண்மையுடன் வேலை செய்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது; கிடைத்த வேலையை தக்கவைத்துக் கொள்ளவும் முடிகிறது.
ஆனால் உண்மையுடன் இருப்பதற்கும் கடவுளோடுள்ள நம் உறவுக்கும் சம்பந்தமிருப்பதால்தான் இந்தக் குணம் அதிக விரும்பத்தக்கது. பண்டைய இஸ்ரவேலர் சட்டங்களையும் பண்டிகைகளையும் கவனமாக ஆசரித்தபோது கடவுளுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்ந்தனர். சபையின் சுத்தத்தைக் குறித்து பேசும்போது, கிறிஸ்தவர்களை பவுல் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல,” “உண்மை, சத்தியம்” “என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” (1 கொரிந்தியர் 5:8; NW) நம்முடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்வதற்கு உண்மைத்தன்மை தேவையானது மட்டுமல்ல, அது இன்றியமையாததும்கூட. ஆனால் உண்மையாயிருத்தல் மாத்திரமே போதாது என்பதை கவனியுங்கள். சத்தியம் அதைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
டைட்டானிக் கப்பலை கட்டியவர்களும் அதில் பயணம் செய்தவர்களும் இந்தக் கப்பல் மூழ்கவே மூழ்காது என்று உண்மையாக நம்பியிருக்கலாம். ஆனால் 1912-ல் முதல் பயணத்திலேயே பனிப்பாறை மீது மோதியதால் அதிலிருந்த 1,517 பேர் பலியானார்கள். முதல் நூற்றாண்டு யூதர்களில் சிலர், தாங்கள் கடவுளை வணங்கும் முறை சரியானதே என்று உண்மையில் நம்பியிருக்கலாம், ஆனால் அவர்கள் வைராக்கியம் ‘திருத்தமான அறிவுக்கேற்றதாய்’ இல்லை. (ரோமர் 10:2, NW) நம்முடைய உண்மையான நம்பிக்கைகள் திருத்தமான தகவலின் அடிப்படையில் இருந்தால்தான் கடவுள் நம்மை ஏற்றுக்கொள்வார். உண்மையோடும் சத்தியத்தோடும் கடவுளுக்கு சேவை செய்வதில் என்னென்ன உட்பட்டிருக்கிறது என்பதை ஆராய்வதற்கு நீங்கள் இருக்கும் இடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாக உங்களுக்கு உதவுவார்கள்.