‘நல்மனசாட்சி உடையவர்களாயிருங்கள்’
“உன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நட” என்பது அடிக்கடி காதில் விழும் ஓர் அறிவுரை. ஆனால் நம்முடைய மனசாட்சி நம்பகமான வழிகாட்டியாய் திகழ்வதற்கு, எது சரி எது தவறு என்ற விஷயத்தில் அதை தகுந்த விதத்தில் பயிற்றுவிக்க வேண்டும். அதோடு, அது சொல்வதை நாம் கூர்ந்து கவனிக்கவும் வேண்டும்.
பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள சகேயு என்ற பெயருடைய மனிதனின் அனுபவத்தை கவனியுங்கள். எரிகோவில் வாழ்ந்து வந்த சகேயு முதன்மை வரிவசூலிப்பாளராக பணியாற்றினார், அவர் செல்வந்தராகவும் விளங்கினார். பணம் பறித்து சொத்து சேர்த்ததாக அவரே ஒப்புக்கொண்டார். இது மற்றவர்களுக்கு தீங்கிழைத்த ஒரு செயல் என்பதில் சந்தேகமில்லை. அநீதியான செயல்களை செய்ததற்காக சகேயுவின் மனசாட்சி அவரை அலைக்கழித்ததா? அப்படி அலைக்கழித்திருந்தாலும் அதை அவர் அசட்டை செய்ததாகவே தெரிகிறது.—லூக்கா 19:1-7.
ஆனால் அவருடைய போக்கை மறுபடியும் சிந்தித்துப் பார்ப்பதற்கு தூண்டிய ஒரு சூழல் உருவாகியது. இயேசு எரிகோவுக்கு வந்தார். குள்ளமாக இருந்த சகேயு அவரைப் பார்க்க ஆசைப்பட்டார், ஆனால் ஜனக்கூட்டம் அலைமோதியதால் அவரால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆகவே அவரை நன்றாக பார்ப்பதற்காக முன்னே ஓடிப்போய் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டார். சகேயு காண்பித்த மிகுந்த ஆர்வம் இயேசுவின் மனதைக் கவர்ந்தது. அதனால் அவரை சந்திக்க வீட்டிற்கு வருவதாக இயேசு அவரிடம் கூறினார். தனது விசேஷ விருந்தாளியை சகேயு மகிழ்ச்சியுடன் உபசரித்தார்.
இயேசுவுடன் கூட்டுறவு கொண்டபோது சகேயு கண்டவையும் கேட்டவையும் அவருடைய மனதைத் தொட்டன, அவருடைய வழிகளை மாற்றிக்கொள்வதற்கும் அவரைத் தூண்டின. “ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்” என அறிவித்தார்.—லூக்கா 19:8.
சகேயுவின் மனசாட்சி பயிற்றுவிக்கப்பட்டது, அதற்கு அவர் செவிசாய்த்தார், அதன்படி செயல்பட்டார். அதனால் சிறந்த பலன்கள் விளைந்தன. “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” என்று இயேசு சொன்னபோது சகேயு எப்படி உணர்ந்திருப்பார் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்!—லூக்கா 19:9.
எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! இதற்கு முன்னர் நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்திருந்தாலும்சரி, நம்மால் மாற முடியும் என்பதை இது காட்டுகிறது. சகேயுவைப் போல, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் செவிசாய்க்க முடியும், எது சரி எது தவறு என்பதை பகுத்துணரும் திறமையையும் நாம் வளர்த்துக்கொள்ள முடியும். அப்படியானால், அப்போஸ்தலன் பேதுரு உந்துவிக்கிறபடி, நாம் ‘நல்மனசாட்சி உடையவர்களாயிருக்க’ முடியும். பயிற்றுவிக்கப்பட்ட நம் மனசாட்சிக்கு செவிசாய்த்து, சரியானதை செய்யவும் முடியும்.—1 பேதுரு 3:16.