“இரண்டு பேர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்”
“எங்கள் குட்டிப் பாப்பாவை பறிகொடுத்த துக்கத்தில் நாங்கள் மூழ்கிப்போய் இரண்டு வருஷங்கள் ஆகின்றன.” பிரான்சிலுள்ள ஸென்ட்-ஏட்யென் நகரத்தில் பிரசுரிக்கப்படும் ல ப்ராக்ரி செய்தித்தாளில் வெளியான ஒரு கடிதம் இப்படித்தான் ஆரம்பித்தது.
“எங்கள் மேலிஸா மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, ட்ரைஸோமி 18 என்ற பயங்கர நோயினால் அவதிப்பட்டு, கடைசியில் அதற்கு பலியானாள். எங்கள் மீது இந்தப் பேரிடி விழுந்தது கொஞ்சங்கூட நியாயம் இல்லாத மாதிரி பட்டது; யாராக இருந்தாலும் இத்தகைய சோகத்திலிருந்து முழுமையாக மீண்டுவர முடியாது என்றே தோன்றியது. நாங்கள் கத்தோலிக்கர்களாக இருந்தபோதிலும், ‘கடவுளே, நீர் உண்மையிலேயே இருந்தீரென்றால் இப்படியெல்லாம் நடக்கறத ஏன் அனுமதிக்கிறீர்?’ என்ற கேள்வியே எங்கள் மனதை சதா வதைத்துக் கொண்டிருந்தது.” இந்தக் கடிதத்தை எழுதிய தாயின் விரக்தியையும் பரிதவிப்பையும் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? அவளுடைய கடிதம் தொடர்கிறது:
“இதெல்லாம் நடந்து கொஞ்ச நாளிலேயே, இரண்டு பேர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை யெகோவாவின் சாட்சிகளென்று உடனே கண்டுகொண்டேன். நாசூக்காக நாலு வார்த்தை பேசி அவர்களை அனுப்பிவிடலாமென்று நினைத்தேன், ஆனால் அவர்கள் கையிலிருந்த ஒரு சிற்றேட்டை பார்த்தேன். அந்த சிற்றேடு, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பது பற்றியது. அதிலுள்ள கருத்துக்களெல்லாம் தவறு என நிரூபிக்கும் நோக்கத்தோடு அவர்களை உள்ளே அனுமதித்தேன். ஏனெனில் போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு அத்தனை துன்பங்களை என் குடும்பம் அனுபவித்துவிட்டதாக நினைத்தேன்; ‘அவளை கடவுளே கொடுத்தார், கடவுளே எடுத்துக்கொண்டார்’ போன்ற பூசி மெழுகும் பேச்சையெல்லாம் கேட்டுக்கேட்டு எங்கள் காதே புளித்துப் போயிருந்தது. ஆனால் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அந்த இரண்டு சாட்சிகளும் எங்கள் வீட்டில் இருந்தார்கள். நான் சொல்வதையெல்லாம் மிகவும் அனுதாபத்துடன் கேட்டார்கள். அவர்கள் என்னிடம் விடைபெறும்போது, என் மனதிலிருந்த பாரமெல்லாம் இறங்கிவிட்டது போல உணர்ந்தேன்; அதனால் அவர்களை இன்னொரு முறை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டேன். இதெல்லாம் நடந்து இரண்டு வருஷம் ஆகிவிட்டது. நான் இன்னும் ஒரு யெகோவாவின் சாட்சி ஆகவில்லை; ஆனால் அவர்களோடு பைபிளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன், முடிந்தபோதெல்லாம் அவர்களுடைய கூட்டங்களுக்கும் போய் வருகிறேன்.”