விசுவாசத்தையும் தைரியத்தையும் தூண்டுகிற கதை—உக்ரைனில் யெகோவாவின் சாட்சிகள்
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைப் போலவே இன்றும் கடவுளுடைய ஜனங்கள் துன்புறுத்துதலுக்கு ஆளாகிறார்கள். (மத்தேயு 10:22; யோவான் 15:20) உக்ரைன் மாதிரி வேறெங்கும் துன்புறுத்துதல் இவ்வளவு காலத்திற்கு நீடிக்கவுமில்லை, அத்தனை கடுமையாக இருக்கவுமில்லை; இந்நாட்டில் 52 ஆண்டுகளாக ராஜ்ய பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த நாட்டில் வாழும் கடவுளுடைய ஜனங்களின் கதையை 2002 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) குறிப்பிட்டுள்ளது. கடும் துன்பத்தின் மத்தியிலும் விசுவாசத்தோடும் தைரியத்தோடும் பலத்தோடும் இருந்தவர்களைப் பற்றிய கதை அது. யெகோவாவின் சாட்சிகளுடைய உக்ரைன் கிளை அலுவலகத்துக்கு வந்த போற்றுதல் கடிதங்களில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
“2002 வருடாந்தர புத்தகத்தை நான் வாசித்து முடித்துவிட்டேன். உக்ரைனில் உங்களுடைய வேலையைப் பற்றி வாசித்தபோது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. உங்களுடைய வைராக்கியமான முன்மாதிரியும் பலமான விசுவாசமும் என்னை ரொம்பவே உற்சாகமடையச் செய்தன என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். உங்களுடைய அதே ஆவிக்குரிய குடும்பத்தில் நானும் ஒருத்தியாக இருப்பதைக் குறித்து பெருமிதமடைகிறேன். என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்!”—ஆன்ட்ரே, பிரான்சு.
“2002 வருடாந்தர புத்தகத்திற்காக உங்களுக்கும் யெகோவாவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. நல்ல விதத்தில் வாழ வேண்டிய ஆண்டுகளை ஜெயிலிலும் சித்திரவதை முகாம்களிலும் கழித்த அநேக சகோதரர்களுடைய அனுபவங்களை வாசிக்கையில் கண்ணீர் உருண்டோடியது. அவர்களுடைய தைரியத்தை மெச்சுகிறேன். 27 வருடங்களாக ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தாலும், அந்த சகோதர சகோதரிகளிடமிருந்து நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவர்களால் நமது பரலோக தகப்பனாகிய யெகோவா மீதுள்ள என் விசுவாசம் பலப்பட்டுள்ளது.”—வையரா, முன்னாள் யுகோஸ்லாவியா.
“எதிர்ப்புமிக்க அந்த எல்லா ஆண்டுகளிலும் நீங்கள் சகிப்புத்தன்மைக்கும் விசுவாசத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்ததை எண்ணி சந்தோஷத்தோடு இக்கடிதத்தை எழுதுகிறேன். யெகோவா மீது நீங்கள் வைத்திருக்கும் முழு நம்பிக்கையும் உண்மையோடு நிலைத்திருக்க வேண்டும் என்ற உறுதியுமே உங்களுக்கு மதிப்பு மரியாதையை தேடித் தருகிறது. அதோடு, சோதனைகள் மத்தியிலும் நீங்கள் காண்பித்த மனத்தாழ்மை, யெகோவா தமது ஜனங்களை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. உங்களுடைய தைரியம், உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றைக் கண்ட பிறகு, எங்களுக்கு வரும் சின்னச் சின்ன பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் அவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடிகிறது.”—தூதேரிஹியா, பிரெஞ்சு பாலினேசியா.
“வருடாந்தர புத்தகத்தை வாசித்த பிறகு, இதை கண்டிப்பாக நான் உங்களுக்கு எழுதியே ஆக வேண்டும் என்றாகிவிட்டது. உற்சாகமூட்டும் எல்லா அனுபவங்களும் என்னுடைய இதயத்தின் ஆழத்தைத் தொட்டுவிட்டன. சரியான சமயத்தில் நமக்கு பலத்தைத் தருகிற அன்பும் ஆதரவுமிக்க தகப்பனால் வழிநடத்தப்படும் இத்தகைய நம்பகமான, ஒன்றுபட்ட அமைப்பின் ஓர் அங்கமாக இருப்பதைக் குறித்து பெருமைப்படுகிறேன். இத்தனை அருமையான யெகோவாவின் ஊழியர்கள் எவ்வளவோ பேர் படாதபாடு பட்டிருப்பதையும் தங்களுடைய உயிரையே துறந்திருப்பதையும் நினைத்து எனக்கு கவலையாக இருந்தது. அதே சமயத்தில் சந்தோஷமாகவும் இருந்தது. ஏனென்றால் அவர்களுடைய தைரியத்தாலும் வைராக்கியத்தாலும் அநேகர் சத்தியத்தைக் கற்று, நம்முடைய அன்பான தகப்பனைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.”—காலெட், நெதர்லாந்து.
“வருடாந்தர புத்தகத்தில் உக்ரைனைப் பற்றி எழுதப்பட்டிருந்ததை வாசித்தபோது அது எங்களுடைய இருதயத்தை தொட்டது என்ற விஷயத்தை நானும் என்னுடைய மனைவியும் உங்களுக்கு எழுதியே தீர வேண்டும். உண்மையுள்ள சகோதரர்களாகிய நீங்கள் நீண்ட காலமாக பெருங்கஷ்டங்களின் மத்தியிலும் சகிப்புத்தன்மைக்கு சிறந்த முன்னுதாரணமாய் திகழ்ந்திருக்கிறீர்கள். நீதிமொழிகள் 27:11-ல் உள்ள வார்த்தைகளின்படி, உக்ரைனிலுள்ள உண்மையுள்ள சகோதரர்கள் அநேகர் பிசாசினுடைய துஷ்டத்தனத்தின் மத்தியிலும் உத்தமத்தைவிட்டு விலகாமல் இருந்தது யெகோவாவை எவ்வளவாய் சந்தோஷப்படுத்தியிருக்க வேண்டும்!”—ஆலன், ஆஸ்திரேலியா.
“உக்ரைனிலுள்ள சகோதரர்களைப் பற்றி வாசித்தபோது என் கண்கள் குளமாயின. வருஷக்கணக்காக சிறைவாசம், சித்திரவதை, கொடுமை, குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ வேண்டிய நிலை என பல துன்பங்களை அவர்கள் சகித்திருந்திருக்கிறார்கள். அவர்களை மிகவும் நேசிக்கிறேன், மதிக்கிறேன் என்பதை உங்களுடைய சபைகளில் இன்னும் சேவை செய்து வருகிற சகோதரர்கள் எல்லாருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். அவர்களுடைய தைரியத்தையும் உறுதியையும் நினைத்தால் எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர்கள் எங்கிருந்து பலத்தை பெற்றிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்; யெகோவாவின் ஆவியே அவர்களுக்கு பலத்தை கொடுத்திருக்கிறது. யெகோவா நம் அருகிலேயே இருக்கிறார், நமக்கு உதவி செய்யவும் விரும்புகிறார்.”—சர்கியே, ரஷ்யா.
“2002 வருடாந்தர புத்தகத்தை வாசித்ததும் நான் அழுதேன். எங்களுடைய சபையிலுள்ள அநேக சகோதர சகோதரிகள் உங்களைப் பற்றி பேசினார்கள். நீங்கள் உண்மையிலேயே எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். இத்தகைய பெரிய ஆவிக்குரிய குடும்பத்தின் பாகமாக இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.”—யூன்ஹி, தென் கொரியா.
“உங்களுடைய விசுவாசம், சகிப்புத்தன்மை, யெகோவாவுக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் நீங்கள் காண்பித்த பற்றுமாறா அன்பு ஆகியவற்றைப் பற்றிய பதிவு என்னை மிகவும் நெகிழ வைத்தது. எங்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தையும் யெகோவா தரும் அபரிமிதமான ஆவிக்குரிய உணவையும் சிலசமயங்களில் நாங்கள் போற்ற தவறிவிடுகிறோம். ஆனால் உங்களுடைய விஷயத்தில் இது உண்மையல்ல. நமது கடவுளுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தால், எந்த சோதனையானாலும் அதை சமாளிப்பதற்கு பலம் தருவார் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுடைய விசுவாசமுள்ள முன்மாதிரி எங்களுக்கு உதவுகிறது.”—பெளலூ, பிரேசில்.
“2002 வருடாந்தர புத்தகத்தில் உங்களுடைய அனுபவங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவற்றால் ஏற்பட்ட சோகம் என் இதயத்தைப் பிழிந்தது. முக்கியமாக சகோதரி லிடியா குர்டாஸ் பற்றிய அனுபவம் என்னை மிகவும் தொட்டது. இந்தச் சகோதரியுடன் நெருங்கிய பந்தம் இருப்பதுபோல் உணர்ந்தேன்.”—நிட்யா, கோஸ்டாரிகா.
“2002 வருடாந்தர புத்தகத்தை இன்று வாசித்து முடித்தேன். இதை நான் வாசித்தபோது யெகோவா மீதுள்ள என் விசுவாசம் பலப்பட்டது. நம்மை வழிநடத்துகிறவர்கள் மீது சந்தேக விதைகள் விதைக்கப்படுவதைப் பற்றிய பதிவை நான் ஒருகாலும் மறக்க மாட்டேன். நம்மை வழிநடத்துகிறவர்களை ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது என்பதை அது எனக்கு கற்பித்தது. உங்களுக்கு மிக்க நன்றி! இந்த ஆவிக்குரிய உணவு இருதயத்திற்கு சிறந்தது, நம்முடைய விசுவாசம் பரீட்சிக்கப்படும் சமயத்திற்காக நம்மை தயார்படுத்தவும் செய்கிறது.”—லெட்டீஸியா, ஐக்கிய மாகாணங்கள்.
“இந்த அருமையான வருடாந்தர புத்தகத்திற்கு எங்களுடைய நன்றி. உக்ரைனில் நம்முடைய சகோதரர்களுடைய வேலையைப் பற்றி முதல் தடவையாக அநேக பிரஸ்தாபிகள் வாசித்தார்கள். இங்குள்ள சகோதரர்கள் பலப்படுத்தப்பட்டார்கள். அநேகர், முக்கியமாக இளைஞர்கள், தங்களுடைய ஊழியத்தை அதிகரித்திருக்கிறார்கள். சிலர் ஒழுங்கான அல்லது துணைப் பயனியர் சேவையில் கால் பதித்திருக்கிறார்கள். தடையுத்தரவின் போது யெகோவாவை சேவித்த சகோதர சகோதரிகளின் கதைகளைக் கேட்டு எல்லாரும் உற்சாகமடைந்தார்கள்.”—சபை ஊழியக் குழு, உக்ரைன்.
உக்ரைனிலுள்ள நமது சகோதரர்களுடைய உண்மைத்தன்மை உலகெங்கிலும் வாழும் யெகோவாவின் ஜனங்களுக்கு உண்மையிலேயே உற்சாகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது. சொல்லப்போனால், வருடாந்தர புத்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் இதயத்தைக் கனிவிக்கும் பதிவுகளை தவறாமல் வாசிப்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலங்களில் நம்முடைய விசுவாசத்தையும் சகிப்புத்தன்மையையும் பலப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.—எபிரெயர் 12:1.