வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஆதியாகமம் 3:22-ல், “நம்மில் ஒருவரைப் போல்” என்று சொன்னபோது யெகோவா யாரை குறிப்பிட்டார்?
“மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்” என்று சொன்னபோது யெகோவா தேவன் தம்மையும் தம்முடைய ஒரேபேறான குமாரனையுமே குறிப்பிட்டதாக தெரிகிறது. (ஆதியாகமம் 3:22) ஏன் என்பதை நாம் பார்க்கலாம்.
முதல் தம்பதியினராகிய ஆதாம் ஏவாளுக்குத் தண்டனைத் தீர்ப்பை வழங்கியபின் யெகோவா இந்த வார்த்தைகளைக் கூறினார். சிலர் இந்த வார்த்தைகளை வேறு விதமாக எடுத்துக் கொள்கின்றனர். எப்படியெனில், ஓர் அரசன் தன்னைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகையில்கூட “எமக்குப் பிரியமில்லை” என பன்மையில் சொல்லலாம்; தான் வகிக்கும் மேன்மையான ஸ்தானத்தின் நிமித்தம் அவ்வாறு சொல்லலாம். அதைப் போலவே, ‘நம்மில் ஒருவர்’ என்ற இந்த வார்த்தைகளும் மேன்மையை குறிப்பதற்காகவே பன்மை வடிவில் இருப்பதாக சிலர் சொல்கின்றனர். ஆனால் ஆதியாகமம் 1:26 மற்றும் 3:22 சம்பந்தமாக, பைபிள் அறிஞர் டானல்ட் ஈ. கௌவன் இவ்வாறு கூறுகிறார்: “மேன்மையை குறிக்கும் ‘நமது’ என்ற பன்மை வடிவத்தையோ . . . ஒரு கடவுளில் மூவர் என்பதைக் குறிக்கும் பன்மை வடிவத்தையோ குறிக்கலாம் என்ற விளக்கங்களுக்கு பழைய ஏற்பாட்டில் எந்த ஆதாரமுமில்லை. . . . இங்கு சொல்லப்படும் எந்த விளக்கமும் ‘நம்மில் ஒருவர்’ என 3:22-ல் பேசப்படுகிற விஷயத்திற்குப் பொருந்துவதில்லை.”
தானாகவே ‘நன்மை தீமையை’ தீர்மானிக்கத் தொடங்கியவனும், அவ்வாறு செய்வதற்கு முதல் மானிட ஜோடியைத் தூண்டியவனுமாகிய பிசாசாகிய சாத்தானை இங்கே யெகோவா குறிப்பிட்டுக் கொண்டிருந்தாரா? அப்படி நினைக்க நியாயமான காரணம் இல்லை. ‘நம்மில் ஒருவரை’ என்ற வார்த்தைகளையே யெகோவா இங்கே பயன்படுத்தினார். யெகோவாவின் உண்மையுள்ள தேவதூதர்களின் கூட்டத்தில் ஒருவனாக சாத்தான் அப்போது இருக்கவில்லை, ஆகவே தமது பக்கம் இருந்தவர்களில் ஒருவனாக அவனை யெகோவா கருதியிருக்க முடியாது.
உண்மையுள்ள தேவதூதர்களை இங்கே கடவுள் குறிப்பிட்டாரா? நாம் உறுதியாக அவ்வாறு கூற முடியாது. ஆனால் ஆதியாகமம் 1:26 மற்றும் 3:22-ல் உள்ள ஒரேமாதிரியான வார்த்தைகள் நமக்கு ஒரு குறிப்பைத் தருகின்றன. ஆதியாகமம் 1:26-ல், ‘நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக’ என யெகோவா சொன்னதாக நாம் வாசிக்கிறோம். இந்த வார்த்தைகளை யாரிடம் பேசிக் கொண்டிருந்தார்? இயேசு என்ற பரிபூரண மனிதராக ஆன ஆவி சிருஷ்டியைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: ‘அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய சகலமும் அவரைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டது.’ (கொலோசெயர் 1:15, 16) ஆம், ஆதியாகமம் 1:26-ன்படி, வானத்தையும் பூமியையும் படைக்கும்போது தமது பக்கத்திலிருந்த ‘கைதேர்ந்த வேலையாளாகிய’ தமது ஒரேபேறான குமாரனிடமே யெகோவா பேசிக் கொண்டிருந்தார் என்ற முடிவுக்கு வருவது நியாயமாக தோன்றுகிறது. (நீதிமொழிகள் 8:22-31, NW) அதேவிதமான வார்த்தைகள் ஆதியாகமம் 3:22-லும் காணப்படுவதால், இந்த சந்தர்ப்பத்திலும் யெகோவா தமக்கு மிகவும் நெருக்கமானவராகிய ஒரேபேறான குமாரனிடமே பேசிக் கொண்டிருந்தார் என்பதை தெரிவிக்கின்றன.
கடவுளுடைய ஒரேபேறான குமாரனுக்கு ‘நன்மை தீமை’ அறியத்தக்க அறிவு இருந்திருக்க வேண்டும். யெகோவாவுடன் நெடுங்காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால், தமது தகப்பனுடைய சிந்தையையும் நியமங்களையும் தராதரங்களையும் அவர் நன்கு கற்றிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. இவற்றையெல்லாம் தமது குமாரன் அறிந்து இவற்றிற்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருந்தார் என்பதை யெகோவா முழுமையாக நம்பியதால், ஒவ்வொரு விஷயத்திலும் தம்மிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்குப் பதிலாக சில விஷயங்களை அவரே கையாளுவதற்கு சிறிதளவு சுதந்திரத்தை கொடுத்திருக்கலாம். ஆகவே இந்தளவுக்கு, இந்தக் குமாரன் நன்மை தீமையை தீர்மானிக்கும் தகுதியையும் உரிமையையும் உடையவராய் இருந்திருப்பார். என்றாலும், சாத்தானையோ ஆதாம் ஏவாளையோ போல யெகோவாவுடைய தராதரத்திற்கு முரணான தராதரத்தை இயேசு வகுக்கவில்லை.