“பொருத்தமற்று பிணைக்கப்படாதிருங்கள்”
ஒட்டகத்தையும் எருதையும் கட்டி ஏர் உழும் பரிதாபக் காட்சியை இங்கே நீங்கள் படத்தில் காணலாம். அந்த இரண்டு விலங்குகளையும் ஒன்றாக பிணைக்கும் நுகத்தடி அவை இரண்டிற்குமே கஷ்டத்தைக் கொடுக்கிறது; உண்மையில், ஒரே அளவும் பலமும் கொண்ட இரு விலங்குகளுக்காகத்தான் அது தயாரிக்கப்படுகிறது. பாரமிழுக்கும் இத்தகைய விலங்குகளின் மீது கடவுள் அக்கறை கொண்டு, “மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக” என்று இஸ்ரவேலரிடம் கூறினார். (உபாகமம் 22:10) இதே நியதி எருதுக்கும் ஒட்டகத்திற்கும் பொருந்தும்.
பொதுவாக, ஒரு விவசாயி தனது விலங்குகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டத்தை கொடுக்க மாட்டார். ஆனால் அவரிடம் இரண்டு எருதுகள் இல்லையென்றால், தன்னிடமுள்ள இரண்டு வித்தியாசமான விலங்குகளை பிணைக்கக்கூடும். இங்கே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, இதைத்தான் 19-ம் நூற்றாண்டு விவசாயி ஒருவரும் செய்ததாக தெரிகிறது. அந்த இரண்டு விலங்குகளின் அளவும் எடையும் வேறுபட்டிருப்பதால், பலவீனமான பிராணி மற்றொன்றுடன் சேர்ந்து அடியெடுத்து வைக்கப் போராட வேண்டியிருக்கும், பலமான பிராணியோ பெரும் சுமையை சுமக்க வேண்டியிருக்கும்.
நமக்கு ஒரு முக்கியமான பாடம் கற்பிப்பதற்கு, பொருத்தமற்ற விதத்தில் பிணைக்கப்படுவதைப் பற்றிய இந்த உதாரணத்தை அப்போஸ்தலன் பவுல் பயன்படுத்தினார். “அவிசுவாசிகளுடன் பொருத்தமற்று பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் அநீதிக்கும் என்ன உறவு? ஒளிக்கும் இருளுக்கும் என்ன பங்கு?” என அவர் எழுதினார். (2 கொரிந்தியர் 6:14, NW) ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு பொருத்தமற்ற விதத்தில் பிணைக்கப்படக்கூடும்?
கிறிஸ்தவர் ஒருவர் தனது மதத்தைச் சாராத வேறொருவரை திருமணத் துணையாக தேர்ந்தெடுக்கையில் இவ்வாறு நேரிடலாம். இப்படிப்பட்ட பிணைப்பு இருவருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கும்; ஏனெனில் அந்தத் தம்பதியினர் இருவரும் அடிப்படை விஷயங்களில் ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமையுடன் இருப்பார்கள்.
திருமணத்தை யெகோவா ஏற்படுத்தி வைத்தபோது, “ஏற்ற துணை” அல்லது ‘பூர்த்திசெய்யும் ஒரு துணை’ என்ற ஸ்தானத்தை மனைவிக்குக் கொடுத்தார். (ஆதியாகமம் 2:18; NW அடிக்குறிப்பு) அதைப் போலவே, மனைவியை “துணைவி” என தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் மூலம் குறிப்பிட்டார். (மல்கியா 2:14, பொது மொழிபெயர்ப்பு) தம்பதிகள் இருவரும் ஒன்றுசேர்ந்து ஒரே ஆன்மீக வழியில் செல்ல வேண்டும், சுமைகளை பகிர்ந்துகொண்டு, பலன்களை சமமாக பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என நம் படைப்பாளர் விரும்புகிறார்.
‘கர்த்தருக்குட்பட்டவரையே’ திருமணம் செய்துகொள்வதன் மூலம் கிறிஸ்தவர் ஒருவர் நமது பரலோகப் பிதாவின் அறிவுரைக்கு மரியாதை காட்டுகிறார். (1 கொரிந்தியர் 7:39) இது ஒன்றுபட்ட மணவாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடுகிறது; ஒரு விசேஷ கருத்தில், ‘உண்மையுள்ள பிணைப்பாளிகளாக’ துணைவர்கள் இருவரும் கடவுளுக்கு சேவை செய்வது அவருக்கு துதியையும் கனத்தையும் சேர்க்கும்.—பிலிப்பியர் 4:3, NW.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
ஒட்டகமும் எருதும்: From the book La Tierra Santa, Volume 1, 1830