‘சிநேகம், அன்பு, கவனிப்பையெல்லாம் கண்டேன்’
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) இயேசு சொன்னது போல, அன்புதான் ஆரம்ப கால கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அடையாளச் சின்னமாக இருந்தது. கிறிஸ்துவின் மரணத்திற்கு நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்தவர்களைப் பற்றி மற்றவர்கள் சொன்னதை டெர்ட்டூலியன் இவ்வாறு மேற்கோள் காட்டினார்: ‘அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவாய் நேசிக்கிறார்கள் பாருங்கள், ஒருவருக்காக ஒருவர் சாகவும்கூட தயாராய் இருக்கிறார்களே.’
அப்படிப்பட்ட அன்பை இன்று உலகத்தில் பார்க்க முடியுமா? ஆம், முடியும். உதாரணத்திற்கு, பிரேசில் நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது கிளை அலுவலகத்திற்கு வந்த ஒரு கடிதத்தை சற்று கவனியுங்கள். மரிலியா என்ற பெண் அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்:
“என் அம்மா ஒரு யெகோவாவின் சாட்சி; அர்ஜென்டினாவிலுள்ள பியா மர்சேதேஸ் என்ற ஊரில் அவர் வசித்து வந்தபோது, மூட்டுத் தேய்வினால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்குக் கீழே செயலிழந்து படுத்த படுக்கையானார். அவர் வியாதிப்பட்ட முதல் எட்டு மாதங்களுக்கு, அவரை அன்பாகவும் கரிசனையாகவும் கவனித்துக்கொண்டது பியா மர்சேதேஸிலிருந்த யெகோவாவின் சாட்சிகள்தான். வீட்டை சுத்தமாக்குவதிலிருந்து சாப்பாடு தயாரிப்பது வரை எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள். அம்மா ஆஸ்பத்திரியில் இருந்தபோதுகூட, யாராவது அவர் கூடவே இருந்து இராப் பகலாக மாறி மாறி கவனித்துக் கொண்டார்கள்.
“நானும் அம்மாவும் தற்போது பிரேசிலில் இருக்கிறோம், அம்மா இன்னும் வியாதியிலிருந்து முழுமையாக மீளவில்லை. இங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் அம்மா குணமாவதற்கு வேண்டிய அனைத்தையும் முடிந்தளவுக்கு செய்து வருகிறார்கள்.”
தன் கடிதத்தின் முடிவில் மரிலியா இவ்வாறு எழுதியிருந்தார்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன், ஆனால் சிநேகம், அன்பு, கவனிப்பையெல்லாம் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் கண்ணாரக் கண்டேன்.”
ஆம், உண்மையான கிறிஸ்தவ அன்போடு நடந்துகொள்ளும் ஜனங்கள் இந்த உலகில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நடந்துகொள்வதன் மூலம், இயேசுவின் போதனைகள் நம் வாழ்க்கையில் எந்தளவு செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை காட்டுகிறார்கள்.