வியப்புணர்வை நீங்கள் வளர்த்து வருகிறீர்களா?
கடவுளுடைய படைப்புகளையும் பண்புகளையும் புகழ்ந்து பேசும்போது பைபிள் எழுத்தாளர்கள் அடிக்கடி வியப்புணர்வை தூண்டுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ‘வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்திருக்கிறீர்’ என சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 139:14, பொது மொழிபெயர்ப்பு) “ஆண்டவரே, நீரே என் கடவுள்; நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்; உம் பெயரைப் போற்றுவேன்; நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்” என தீர்க்கதரிசியாகிய ஏசாயா எழுதினார். (ஏசாயா 25:1, பொ.மொ.) “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” என அப்போஸ்தலன் பவுல் வியந்து கூறிய வார்த்தைகளையும் நினைத்துப் பாருங்கள்.—ரோமர் 11:33.
“வியப்பு” என்ற வார்த்தையை ஓர் அகராதி இவ்வாறு வரையறுக்கிறது: “வித்தியாசமான நிகழ்ச்சியோ பொருளோ ஏற்படுத்தும் விவரிக்க முடியாத ஓர் அதிசய உணர்வு. நம்ப முடியாத அளவுக்கு விந்தையை ஏற்படுத்துவது, முக்கியமாக போற்றுதல் அல்லது ஆர்வம் கலந்த ஆச்சரியத்தைக் குறிக்கிறது.”
சிறுபிள்ளைகள் புதிதாக ஒன்றைப் பார்க்கும்போதோ உணரும்போதோ கேட்கும்போதோ கண்களை அகல விரித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதைக் காண்பது ஆனந்தமான ஒன்றல்லவா? ஆனால் ஒருவருக்கு வயதாக ஆக, ஆர்வத்துடிப்பால் அல்லது புதுமையான ஒன்றை பார்ப்பதால் வரும் இத்தகைய வியப்புணர்வு பெரும்பாலும் குறைந்துவிடுவது வருந்தத்தக்கது.
இருந்தாலும், மேற்குறிப்பிடப்பட்ட பைபிள் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, வியப்பு என்பது அவர்களுடைய இயல்பில் கலந்த ஒன்றாக இருந்தது. அந்த உணர்வு எப்போதும் அவர்களுக்கு இருந்தது. எப்படி? கடவுளுடைய கிரியைகளைக் குறித்து போற்றுதலோடு அவர்கள் தியானித்ததன் மூலம் வியப்புணர்வை வளர்த்துக் கொண்டார்கள். சங்கீதக்காரன் இவ்வாறு ஜெபித்தார்: “பண்டைய காலங்களை நான் நினைக்கிறேன், நீர் செய்த அனைத்தையும் சிந்தனை செய்கிறேன்; உமது படைப்புகளை கண்டு வியக்கிறேன், அவை என் மனதை நிரப்புகின்றன.”—சங்கீதம் 143:5, த நியூ இங்லிஷ் பைபிள்.
கடவுளை வழிபடும் ஜனங்களிடம் இன்றும் இத்தகைய வியப்புணர்வு காணப்படுவது எவ்வளவு பாராட்டத்தக்கது! உங்களுக்கு இத்தகைய வியப்புணர்வு இருக்கிறதா? அதை நீங்கள் வளர்த்து வருகிறீர்களா?