“மிகப் பிரமாண்டமான தொழில்நுட்பங்களில் ஒன்று”
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் சாலொமோன் ராஜா ஆண்ட காலத்தில் எருசலேமில் யெகோவாவின் ஆலயம் கட்டப்பட்டபோது, அழகிய தண்ணீர் தொட்டி ஒன்று வெண்கலத்தில் உருவாக்கப்பட்டது; இது ஆலயத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. 30 டன்னுக்கும் அதிகமான எடையுடைய இத்தொட்டியின் கொள்ளளவு சுமார் 40,000 லிட்டராகும். இந்தப் பெரிய தொட்டி வெண்கலக் கடல் என அழைக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 7:23-26) “இது எபிரெயர்களால் அதுவரை மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு தொழில்நுட்பத்திலும் மிகப் பிரமாண்டமான தொழில்நுட்பங்களில் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது” என பைபிள் தொல்லியல் நிபுணர் என்ற ஆங்கில நூலில் கனடாவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தொழில்நுட்ப அலுவலர் ஆல்பர்ட் ஸாய்ட்ஹோஃப் கூறுகிறார்.
இந்தக் கடல் தொட்டி எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டது? “யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, . . . களிமண் தரையிலே ராஜா இவைகளை [வெண்கல கலன்களை] வார்ப்பித்தான்” என பைபிள் கூறுகிறது. (1 இராஜாக்கள் 7:45, 46) “அந்த வார்ப்பு முறை, பெரிய பெரிய வெண்கல மணிகள் தயாரிக்க இன்று பயன்படுத்தப்படும் மெழுகு வார்ப்பு முறைக்கு (‘lost wax’ method) ஒத்ததாகவே இருந்திருக்க வேண்டும்” என ஸாய்ட்ஹோஃப் கூறுகிறார். அவர் இவ்வாறு விளக்குகிறார்: “இதற்கு பொதுவாக அக்கடல் தொட்டியின் வார்ப்பை செய்து, அதை நன்கு காய வைத்திருக்க வேண்டும். பின்பு அதை தலைகீழாக வைத்து, அதன்மீது மெழுகு பூசியிருக்க வேண்டும். . . . அதன் பிறகு இந்த மெழுகின்மீது வெளிப்புற வார்ப்பை செய்து அதை காய வைத்திருக்க வேண்டும். கடைசியாக, இரண்டு வார்ப்புகளுக்கும் இடையிலுள்ள மெழுகை உருக்கி எடுத்துவிட்டு அந்த இடைவெளியில், உருக்கிய வெண்கலத்தை ஊற்றியிருக்க வேண்டும்.”
பிரமாண்டமான அளவும் எடையும் கொண்ட இந்த வெண்கலக் கடலை நிர்மாணிப்பதற்கு அதிக திறமை தேவைப்பட்டது. உட்புறத்திலுள்ள மையப்பகுதியும் வெளிப்புற வார்ப்பும் சுமார் 30 டன் எடையுள்ள வெண்கல உருக்கின் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க வேண்டியிருந்தது; வெடிப்போ வேறெந்த குறைபாடுகளோ ஏற்படாதிருக்க முழுவதையும் ஒரே சமயத்தில் வார்த்தெடுக்க வேண்டியிருந்தது. உருக்கப்பட்ட உலோகத்தை வார்ப்புக்குள் ஊற்றுவதற்கு வசதியாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வரிசையான உருக்கு உலைகள் ஒருவேளை தேவைப்பட்டிருக்கலாம். எப்பேர்ப்பட்ட பிரமாண்டமான வேலை!
ஆலய பிரதிஷ்டையின் போது அரசன் சாலொமோன் ஏறெடுத்த ஜெபத்தில், ஆலய பணி அனைத்திற்குமுரிய புகழை யெகோவாவுக்கு சேர்த்தார். அவர் இவ்வாறு கூறினார்: “உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.”—1 இராஜாக்கள் 8:24.