நேர்மையான மனசாட்சி
கென்யாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் சார்ல்ஸ் ஒருநாள் வேலையிலிருந்து வீடு திரும்புகையில் தன் செல்போனை தொலைத்துவிட்டார். கென்யாவில் செல்போன்கள் விலையுயர்ந்த ஆடம்பரப் பொருளாகவே இன்னும் உள்ளன.
“அதை யாராவது என்னிடம் திருப்பிக் கொடுப்பார்கள் என கனவிலும் நினைக்கவில்லை” என்றார் சார்ல்ஸ். எனினும் சில நாட்களுக்குப் பிறகு கென்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தபோது அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. அங்கு வந்து செல்போனை பெற்று செல்லும்படி அவரிடம் சொல்லப்பட்டபோது அவருடைய காதுகளையே அவரால் நம்ப முடியவில்லை! அவர் பயணித்த அதே வாகனத்தில் யெகோவாவின் சாட்சியாக இருக்கும் முழுநேர ஊழியர் ஒருவர் பயணித்தார் என்றும், அந்த போனை அவர் கண்டெடுத்தார் என்றும் அறிந்துகொண்டார். அதன் உரிமையாளரைக் கண்டுபிடிப்பதற்காக அந்த போனை கிளை அலுவலகத்துக்கு அந்த ஊழியர் எடுத்து வந்தார்; அங்கு வேலை செய்யும் தன்னார்வ ஊழியர்கள் அதன் உரிமையாளரின் நம்பரை அந்த போன் டிஸ்ப்ளேயில் பார்த்து தெரிந்துகொண்டு சார்ல்ஸைக் கண்டுபிடித்தார்கள்.
“என்னைக் கண்டுபிடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டு முயற்சி எடுத்ததற்காக அதிக நன்றி சொல்கிறேன். செல்போனை கண்டெடுத்து, என்னையும் தேடிக் கண்டுபிடித்து, அதை திருப்பிக் கொடுத்த உங்கள் அமைப்பின் அங்கத்தினர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் காலத்தில் நேர்மையான ஆட்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் யெகோவா தேவனின் உண்மையுள்ள சாட்சிகளைப் போல தனிச்சிறப்புடன் சிலர் விளங்குவது ஆறுதலளிக்கிறது” என கிளை அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தில் சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
எங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் நேர்மைக்குப் பெயர்பெற்றவர்கள். அவர்கள் பின்வருமாறு சொன்ன அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுகிறவர்கள்: “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.” (எபிரெயர் 13:18; 1 கொரிந்தியர் 11:1) “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என இயேசு சொன்னதுபோல், இத்தகைய நடத்தை யெகோவா தேவனை மகிமைப்படுத்துகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—மத்தேயு 5:16.