யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஓயாமல் சந்திக்கிறார்கள்?
வீட்டுக்கு வீடு ஊழியத்தில் விடாமல் தொடர்ந்து ஈடுபடுகிறவர்கள் என யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கிலும் பெயர் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் செய்தியில் விருப்பம் காட்டாதபோதிலும் ஏன் ஓயாமல் வந்து தங்களை சந்திக்கிறார்கள் என சிலர் யோசிக்கின்றனர். ரஷ்யாவிலிருந்து வரும் இரண்டு கடிதங்கள் இதைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன.
“உண்மையைச் சொன்னால், முன்பெல்லாம் யெகோவாவின் சாட்சிகள் என்றாலே எனக்கு ஆகாது” என காபாரோவ்ஸ்க் என்ற இடத்தைச் சேர்ந்த 19-வயது மாஷா ஒப்புக்கொள்கிறாள். ஆனால் சாட்சிகள் பிரசுரிக்கும் சில பத்திரிகைகளை வாசித்த பிறகு, அவள் தனது மனப்பான்மையை மாற்றிக்கொண்டாள். “அது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது, அறிவொளியூட்டுகிறது, மிக முக்கியமாக, இந்த உலகை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பதற்கு ஒருவரை தூண்டுகிறது” என மாஷா எழுதுகிறாள். “வாழ்க்கைக்கு ஒரு நோக்கமிருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.”
விலாடிவோஸ்டோக்கிற்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள யூசூரிஸ்க் என்ற நகரத்தைச் சேர்ந்த ஸ்வெட்லானா இவ்வாறு எழுதினாள்: “சமீப காலத்தில்தான் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் பத்திரிகைகள் நம்முடைய காலத்திற்கு மிக மிக அவசியம். எல்லா கட்டுரைகளையும் ஆர்வத்துடன் வாசிக்கிறேன். அவை மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கின்றன, தகவல்களை அள்ளித் தருகின்றன, அறிவுக்கண்களை திறக்கின்றன. மிக்க நன்றி! இந்த உலகத்தில் இத்தகைய அன்பான, அவசியமான வேலையை செய்து வருவதற்காக உங்களுக்கு மிக்க நன்றி.”
“பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி [மக்கள்] கேள்விப்படுவார்கள்?” என்ற சிந்தையைத் தூண்டும் அப்போஸ்தலன் பவுலின் இக்கேள்வியை உலகெங்கிலும் வாழும் யெகோவாவின் சாட்சிகள் மிகவும் கருத்தாய் எடுத்துக்கொள்கிறார்கள். (ரோமர் 10:14) அடுத்த தடவை யெகோவாவின் சாட்சிகள் உங்களை சந்திக்க வரும்போது அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கு ஏன் சில நிமிடங்களை நீங்கள் ஒதுக்கக் கூடாது? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தரும் ஆறுதலான செய்தியைக் கேட்டு நீங்களும் அகமகிழலாம்.