பைபிளின் உதவியால் சபலத்தை வென்றார்
இன்றைய உலகில் சபலத்தை தூண்டிவிடும் காரியங்களுக்கு பஞ்சமேயில்லை. எனவே, பைபிள் தராதரங்களை கடைப்பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமாய் இருப்பதில்லை. உதாரணமாக, “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்ற பைபிள் அறிவுரைக்கு செவிசாய்ப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கலாம்.—1 கொரிந்தியர் 6:18.
செபாஸ்டியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரு யெகோவாவின் சாட்சி, போலந்திலுள்ள ஸ்கான்டிநேவிய கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தனது உத்தமத்தன்மையை காத்துக்கொள்ள அவர் கடினமாக போராட வேண்டியிருந்தது.
செபாஸ்டியன் ஒரு யெகோவாவின் சாட்சி என்பது அவருடன் வேலை பார்த்தவர்களுக்கெல்லாம் தெரிந்திருந்தது. அவருடைய சுறுசுறுப்பையும், தங்கமான குணத்தையும் கண்ட அவருடைய சூப்பர்வைஸர்கள், வேலையில் அவருக்குப் பெரிய பெரிய பொறுப்புகளை கொடுத்தார்கள். ஆஃபீஸ் மீட்டிங்குகளில் கலந்துகொள்வதும் அத்தகைய பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது; அந்த மீட்டிங்குகளின்போது ஒழுக்கக்கேடான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
சீக்கிரத்திலேயே செபாஸ்டியனின் மனதில் பலவாறான எண்ணங்கள் முட்டி மோதின. “நான் ஒரு யெகோவாவின் சாட்சின்னு என்னோட முதலாளிக்கு நல்லா தெரியும். அதனாலதான் என்னை அவர் முழுசா நம்புறார், என்கிட்ட கேட்டுத்தான் எந்தக் காரியத்தையும் செய்யறார். அந்த மாதிரியான ஆஃபீஸ் மீட்டிங்குகளில் நான் கலந்துக்க மறுத்தேன்னா, இத்தனை கஷ்டப்பட்டு கிடைத்த வேலையே பறி போயிடுமே. அதனால, அந்தக் கூட்டங்கள்ல நான் ஒரு பார்வையாளரா மட்டும் இருக்கலாம் இல்லையா?” என்றெல்லாம் நினைத்தார்.
அந்த வேலையில் தான் இன்னும் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டியிருந்ததென்பது செபாஸ்டியனுக்கு பிறகு தெரிய வந்தது. வெளிநாட்டு கஸ்டமர்களை அவர் “கவனித்துக்கொள்ள” வேண்டியிருந்தது; அதாவது இரவு வேளையில் அவர்கள் ‘ஜாலியாக’ இருப்பதற்கு, “பெண்களை” ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியிருந்தது. அவர் என்ன செய்தார்?
ஒழுக்கக்கேட்டை குறித்த தன்னுடைய பைபிள் சார்ந்த மனப்பான்மையை தன் சூப்பர்வைஸரிடம் மறுபடியும் தெரிவிக்க வேண்டுமென்று தீர்மானித்தார். என்றாலும், தான் அங்கு வேலை பார்ப்பது சரியல்ல என்பதும், அந்த வேலையை தான் எப்படியும் விட வேண்டிவரும் என்பதும் விரைவிலேயே அவருக்கு தெளிவானது. புதிய வேலை ஒன்றை தேடிக் கண்டுபிடித்தார்; சற்று குறைவான சம்பளமே என்றாலும், முந்தின வேலையில் இருந்ததைப் போன்ற எந்த சபலங்களும் இப்புதிய வேலையில் இல்லை. இப்போது செபாஸ்டியன் சுத்தமான மனசாட்சியோடு இருக்கிறார்.
ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபடும்படியோ அதை ஆதரிக்கும்படியோ யாராவது உங்களை மிகவும் வற்புறுத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பெரும் மாற்றங்களை செய்ய நீங்கள் மனமுள்ளவர்களாக இருப்பீர்களா? இதைத்தான் பூர்வ காலத்தில் வாழ்ந்த யோசேப்பு என்பவர் செய்தார்; ஆதியாகமம் 39:7-12-ல் அந்த விவரப்பதிவு உள்ளது.