சந்தோஷமாக நீடூழி வாழ வழி
நீண்ட ஆயுசுடன் வாழவே எல்லாரும் விரும்புகிறார்கள், யாருமே கிழடாக விரும்புவதில்லை என சிலர் கூறுகின்றனர். ஓய்வுபெற்றுவிட்டால் நிறைய நேரம் கிடைக்கும், பொறுப்புகளும் அதிகம் இருக்காது என்பதால் அநேகர் அதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஆனால் நோக்கமின்றியும் பிரயோஜனமின்றியும் வாழ்வதை நினைத்து அஞ்சுகிறார்கள். தனிமை, மகிழ்ச்சியின்மை, உடல் பலவீனம் ஆகியவற்றைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள்.
அப்படியானால், சந்தோஷமான வாழ்க்கையின் இரகசியம் என்ன? இளையவராகட்டும் முதியவராகட்டும், சந்தோஷத்தைப் பெற அவர்களுக்கு உதவுவது நல்ல நண்பர்களும் அன்பான குடும்பத்தினர்களுமே. ஆனால் வயதானோருடைய வாழ்வை வளப்படுத்த பிறருடைய உதவி மட்டுமே முக்கியமானதல்ல. வயதானோர் பிறருக்கு என்ன செய்ய முடியும் என்பது இதைவிட முக்கியம்.
“பிறருடைய வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பது தங்களுடைய சொந்த ஆயுசை நீட்டிக்கும்” என்பதை வயதுசென்ற 423 தம்பதியரை வைத்து நடத்தப்பட்ட நெடுநாளைய ஆராய்ச்சி சுட்டிக்காட்டியது. இந்த ஆராய்ச்சியை நடத்திய ஸ்டெஃபனி பிரௌன் இவ்வாறு கூறுகிறார்: “உறவுகளால் நமக்கு என்ன கிடைக்கிறது என்பது அல்ல, ஆனால் நாம் என்ன கொடுக்கிறோம் என்பதே மிகுந்த நன்மை தருகிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.” வீட்டுவேலையில் பிறருக்கு கைகொடுப்பதும், பிள்ளைகளை கவனித்துக்கொள்வதும், சிறுசிறு எடுபிடி வேலைகள் செய்வதும், போக்குவரத்து உதவி அளிப்பதும், நம்மிடம் பேச வருகிறவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பதும் கொடுப்பதில் அடங்கும்.
சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னர், இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: ‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்.’ (அப்போஸ்தலர் 20:35, NW) சந்தோஷமாக நீடூழி வாழ வழி, வங்கியில் போட்டு வைத்திருக்கும் பெரும் தொகையோ வயதாவதைத் தடுக்கும் மருத்துவ முறைகளோ உணவு திட்டங்களோ அல்ல. மாறாக, பிறருடைய வாழ்க்கையை வளமாக்குவதற்கு தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதும், பிறருக்காக நேரத்தையும் சக்தியையும் பலத்தையும் செலவழிப்பதுமே ஆகும்.
என்றாலும், இப்படி கொடுப்பதால் மட்டும் வயோதிபம், வியாதி, மரணம் ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாது. கடவுளுடைய ராஜ்யமே இப்படிப்பட்ட காரியங்களை ஒழிக்கும். அத்தகைய ஆட்சியில், எல்லா வியாதியும் பறந்துவிடும், ‘மரணமும் இருக்காது.’ (வெளிப்படுத்துதல் 21:3, 4; ஏசாயா 33:24) சொல்லப்போனால், கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் பூங்காவனம் போன்ற பரதீஸான பூமியில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். (லூக்கா 23:43) மகிழ்ச்சியாக நீடூழி வாழ பைபிள் அடிப்படையிலான இந்த உதவியை பிறருக்கு அளிக்க யெகோவாவின் சாட்சிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.