‘எனக்குக் கிடைத்த பயிற்சியைக் குறித்து சந்தோஷம்’
ஆங்கில பேச்சுப் போட்டிக்கு தனது பெயரை கொடுக்கும்படி ஆசிரியர் சொன்னபோது இளம் காஸூனாவுக்கு ஒரே அதிர்ச்சி. ஜப்பானில் ஹோகைடோ என்ற பெரிய வடக்குத் தீவிலிருந்த அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது, ஆனால் இதற்கு முன்பு அவளுடைய பள்ளி இப்போட்டியில் பங்குபெற்றதே இல்லை. போட்டி நடைபெற்ற நாளில், காஸூனாவுக்கு ரொம்ப பயமாக இருந்தது, ஏனென்றால் சுமார் 50 மாணவர்களோடு போட்டியிட வேண்டியிருந்தது. ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட இரண்டு நடுவர்களைப் பார்த்தபோது அவளுக்கு இன்னும் அதிக பயம் வந்துவிட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுடைய பெயர்கள் அறிவிக்கப்பட்டன, கடைசி பரிசு பெற்றவர்களுடைய பெயரில் ஆரம்பித்து பரிசுகள் வழங்கப்பட்டன. கடைசியில் காஸூனாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவளுக்கு ஒரே ஆச்சரியம். அவளும் பக்கத்தில் அமர்ந்திருந்த அவளுடைய ஆசிரியரும் ஆச்சரியத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். காஸூனா மேடைக்குச் சென்று பதக்கத்தை வாங்கியபோது அவளுக்கு இன்னும் ஆச்சரியம்—அவளுக்குக் கிடைத்தது முதல் பரிசு!
“தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் வாயிலாக யெகோவாவின் அமைப்பு தரும் பயிற்சியால்தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று” என மகிழ்ச்சி பொங்க காஸூனா கூறினாள். “எனக்கு இத்தகைய பயிற்சி கிடைத்ததைக் குறித்து அதிக சந்தோஷம்.” சிறு பெண்ணாக இருந்த போதே காஸூனா அந்தப் பள்ளியில் சேர்ந்திருந்தாள், அந்தப் பள்ளி யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டங்களில் ஒன்றாகும். இந்தப் போட்டிக்கு தன்னைத் தயார்படுத்துவதற்காக, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படுகிற பல்வேறு பொருள்களுக்கு, உதாரணமாக மைக்கை பயன்படுத்துதல், கனிவுடனும் உற்சாகத்துடனும் பேசுதல், சைகைகள் செய்தல், பார்வையாளர்களைப் பார்த்து பேசுதல் போன்றவற்றிற்கு காஸூனா விசேஷ கவனம் செலுத்தினாள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் வாராவாரம் நடைபெறும் இப்பள்ளிக்கு வாருங்கள். இளைஞரும் முதியோரும் எப்படி பயன் பெறுகிறார்கள் என்பதே நீங்களே நேரில் வந்து பாருங்கள். இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளலாம். உங்களுடைய வீட்டிற்குப் பக்கத்தில் நடைபெறும் இந்தப் பள்ளியைப் பற்றி கூடுதலான தகவல் பெற நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்.