‘தொடர்ந்து விழித்திருங்கள்’
பூர்வ காலங்களில், பட்டணத்து வாசல்களிலும் ஆலய வாசல்களிலும் சில சமயத்தில் வீட்டு வாசல்களிலும் வாயிற்காப்போர் பணியாற்றினார்கள். இரவிலே கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு காவல் காக்கும் வேலையையும் செய்தார்கள். இது அதிக பொறுப்புமிக்க வேலை, ஏனெனில் வரும் ஆபத்தைப் பற்றி முன்னதாகவே அவர்கள் மக்களை எச்சரித்தால்தான் நகரத்தைப் பாதுகாக்க முடியும்.
வாயிற்காப்போருடைய வேலையைப் பற்றி இயேசு நன்கு அறிந்திருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் தமது சீஷர்களை வாயிற்காப்போருக்கு ஒப்பிட்டு பேசினார்; யூத ஒழுங்கு முறைக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருந்ததால் தொடர்ந்து விழித்திருக்கும்படி உற்சாகப்படுத்தினார். ‘அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், [“தொடர்ந்து,” NW] விழித்திருங்கள். ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது . . . [“தொடர்ந்து,” NW] விழித்திருக்கும்படிக்குக் காவல் காக்கிறவனுக்குக் கற்பிப்பான். அப்படியே நீங்களும் [“தொடர்ந்து,” NW] விழித்திருங்கள்; ஏனெனில் வீட்டெஜமான் எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.’—மாற்கு 13:33-35.
அதே விதமாகவே, இந்தக் காவற்கோபுர பத்திரிகையும் 125 வருடங்களுக்கும் மேலாக, ‘தொடர்ந்து விழித்திருங்கள்’ என்று இயேசு கொடுத்த ஊக்குவிப்பைப் பறைசாற்றி வந்திருக்கிறது. எப்படி? இப்பத்திரிகையின் இரண்டாவது பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “பைபிள் முன்னுரைத்தபடியே நடந்து வரும் உலக சம்பவங்களை இது உன்னிப்பாக கவனித்து வருகிறது. மனிதரை ஒடுக்குகிறவர்களைக் கடவுளுடைய ராஜ்யம் வெகு சீக்கிரத்தில் அழித்து, இந்த பூமியை பூங்காவனம் போன்ற இடமாக மாற்றும் என்ற நற்செய்தியால் அனைவருக்கும் ஆறுதலளிக்கிறது.” காவற்கோபுர பத்திரிகை உலகெங்கிலும் 150 மொழிகளில் 2,60,00,000-க்கும் அதிகமான பிரதிகள் விநியோகிக்கப்படுகிறது; மதப் பத்திரிகைகளில் இதுவே உலகத்தில் மிகப் பரவலாக விநியோகிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, பூர்வகால வாயிற்காப்போரைப் போல யெகோவாவின் சாட்சிகளும், ஆன்மீக ரீதியில் ‘விழித்திருக்கும்படி’ எங்குமுள்ள மக்களை உந்துவிக்கின்றனர். ஏனெனில் எஜமானரான இயேசு கிறிஸ்து திரும்பி வந்து இந்த உலகத்தின் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும் காலம் சமீபத்திருக்கிறது.—மாற்கு 13:26, 37.