நன்னடத்தை ‘தேவனுடைய உபதேசத்தை அலங்கரிக்கிறது’
ரஷ்யாவில் உள்ள கிராஸ்நயார்ஸ்க் என்ற நகரைச் சேர்ந்த இளம் மாரீயாவுக்கு மிக இனிய குரல். ஆகவே அவளுடைய ஆசிரியை அவளை பள்ளியின் பாடகர் குழுவில் சேர்த்துவிட்டார். உடனே அவள் ஆசிரியையிடம் போய், குறிப்பிட்ட சில பாடல்களை தன்னால் பாட முடியாதென தாழ்மையுடன் விளக்கினாள். ஏன்? ஏனென்றால் மத சம்பந்தமான பாடல்களைப் பாடுவது அவளுடைய பைபிள் சார்ந்த நம்பிக்கைகளுக்கு முரணாக இருந்தது. ஆனால், ‘பாடலின் மூலம் கடவுளை மகிமைப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என அந்த ஆசிரியை வியந்தார்.
திரித்துவ கடவுளைப் புகழ்ந்து பாட முடியாததற்கான காரணத்தை மாரீயா விளக்கினாள்; கடவுளும் இயேசு கிறிஸ்துவும் ஒரே நபர் அல்ல என்பதையும், பரிசுத்த ஆவி என்பது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி என்பதையும் பைபிளிலிருந்து காட்டினாள். (மத்தேயு 26:39; யோவான் 14:28; அப்போஸ்தலர் 4:31) “இதனால் டீச்சருக்கும் எனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படல. எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாருமே ரொம்ப நல்லவங்க. நாங்க நாங்களாகவே இருக்கணும்னுதான் அவங்க விரும்புறாங்க” என மாரீயா சொல்கிறாள்.
அந்தப் பள்ளி ஆண்டு முழுவதும் மாரீயாவின் நிலைநிற்கை அவளுடைய ஆசிரியைகள் மற்றும் சக மாணவர்களின் நன்மதிப்பை அவளுக்குப் பெற்றுத் தந்தது. “பைபிள் நியமங்கள் என்னுடைய வாழ்க்கைக்கு கைகொடுக்குது. அந்த வருஷம் முடிவில், நேர்மைக்காகவும் ஒழுங்கிற்காகவும் எனக்கு அவார்டு கிடைச்சுது. என்னை நல்ல முறையில் வளர்த்ததற்காக என் பெற்றோருக்கு ஸ்கூலிலிருந்து ஒரு நன்றிக் கடிதமும் கிடைச்சுது” என மாரீயா கூறுகிறாள்.
ஆகஸ்ட் 18, 2001-ல் மாரீயா முழுக்காட்டப்பட்டாள். “மகத்தான கடவுளான யெகோவாவுக்கு சேவை செய்ய முடிவதை நினைத்து அதிக சந்தோஷப்படுறேன்!” என சொல்கிறாள். உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் இளம் சாட்சிகள், ‘நம் இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரியுங்கள்’ என்ற தீத்து 2:9-ன் வார்த்தைகளுக்கு இசைவாக வாழ்கிறார்கள்.
[பக்கம் 32-ன் படம்]
பாராட்டுக் கடிதமும் நன்மதிப்பு சான்றிதழும்
[பக்கம் 32-ன் படம்]
மாரீயா, முழுக்காட்டுதலுக்கு பின்பு தன் பெற்றோருடன்