நினைவுகூர வேண்டிய ஒரு நிகழ்ச்சி
அது என்ன நிகழ்ச்சி? சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதரின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி அது. ‘நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்து கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறேன். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன்’ என அவர் கூறினார். (யோவான் 10:17, 18) அந்த மனிதர் இயேசு கிறிஸ்துவே.
தமது தியாக மரணத்தை நினைவுகூரும்படி சீஷர்களுக்கு இயேசு கட்டளையிட்டார். இந்நிகழ்ச்சி “கர்த்தருடைய இராப்போஜனம்” என்பதாக அழைக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 11:21, கிங் ஜேம்ஸ் வர்ஷன்) தம்முடைய மரணம் நினைவுகூரப்பட வேண்டும் என்பதற்காக இயேசு ஆரம்பித்து வைத்த அந்த ஆசரிப்பு, 2005, மார்ச் 24-ம் தேதி வியாழக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யெகோவாவின் சாட்சிகளாலும் அவர்களுடைய நண்பர்களாலும் அனுசரிக்கப்படும்.
அப்போது பயன்படுத்தப்படும் புளிப்பில்லாத அப்பமும் சிகப்பு திராட்ச ரசமும் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதை அங்குக் கொடுக்கப்படும் பைபிள் பேச்சு தெளிவுபடுத்தும். (மத்தேயு 26:26-28) கிறிஸ்தவர்கள் எவ்வளவு அடிக்கடி இதை ஆசரிக்க வேண்டும்?, அப்பத்திலும் திராட்ச ரசத்திலும் யார் பங்கெடுப்பது பொருத்தமானது?, இயேசுவின் மரணத்திலிருந்து யார் பலனடைகிறார்கள்? போன்ற கேள்விகளுக்கும் அப்பேச்சு பதிலளிக்கும். இந்த முக்கியமான ஆசரிப்பு இயேசு ஏன் பூமிக்கு வந்தார், ஏன் மரித்தார் என்பதைப் புரிந்து கொள்ள அனைவருக்கும் உதவும்.
இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள். இது நடைபெறும் சரியான இடத்தையும் நேரத்தையும் தெரிந்து கொள்ள அருகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள்.