நேசத்திற்குரியவர்களுடன் உரையாடுகிறீர்களா?
“நேசத்திற்குரியவர்களுடன் உரையாடுவது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது” என அறிக்கை செய்கிறது போலந்து நாட்டு வாராந்தர பத்திரிகையான போலிடிக்கா. ஐக்கிய மாகாணங்களில், தம்பதிகள் தினமும் ஆறு நிமிடமே அர்த்தமுள்ள விதத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. பாதிப் பேர் பிரிந்து போவதற்கும் விவாகரத்து செய்துகொள்வதற்கும் இதுவே காரணமென நிபுணர்கள் சிலர் கருதுகிறார்கள்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள உரையாடலைப் பற்றி என்ன சொல்லலாம்? பெரும்பாலோருடைய விஷயத்தில், “அது ஒரு உரையாடலைப் போல் இல்லாமல், இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லிக் கொடுத்தார்கள்? உன்னுடைய நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? என குறுக்கு விசாரணை செய்வதைப் போல் ஆகிவருகிறது” என்று மேற்குறிப்பிடப்பட்ட பத்திரிகை கூறுகிறது. “இப்படியிருக்க நம்முடைய பிள்ளைகள் எப்படி உணர்ச்சிப்பூர்வமான உறவுகளை வளர்த்துக் கொள்வார்கள்?” என அது கேட்கிறது.
நன்கு பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறமை தானாகவே வந்துவிடாது. அப்படியென்றால், உரையாடும் திறமையை நாம் எப்படி வளர்த்துக் கொள்ளலாம்? கிறிஸ்தவ அப்போஸ்தலன் யாக்கோபு பின்வரும் முக்கிய அறிவுரையை நமக்குக் கொடுத்தார்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” (யாக்கோபு 1:19) ஆம், உற்சாகமூட்டும் உரையாடலை அனுபவிப்பதற்கு, மற்றவர் பேசுகையில் நாம் கூர்ந்து கேட்க வேண்டும், பொறுமையிழந்து உரையாடலில் குறுக்கிடவோ, அல்லது கேட்பதற்கு முன்பே முடிவுகட்டவோ கூடாது. விமர்சிப்பதைத் தவிருங்கள், ஏனென்றால் அது எளிதில் உரையாடலை நிறுத்திவிடும். அதோடு, இயேசு சாதுரியமாய் கேள்விகள் கேட்டார், விசாரணை செய்வதற்கு அல்ல, ஆனால் செவிகொடுத்துக் கேட்போருடைய மனதில் இருப்பதை வரவழைப்பதற்கும் அவர்களுக்கிடையே உறவை பலப்படுத்துவதற்குமே கேட்டார்.—நீதிமொழிகள் 20:5; மத்தேயு 16:13-17; 17:24-27.
பைபிளில் காணப்படும் சிறந்த நியமங்களைப் பின்பற்றி, உங்களுடைய நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோரிடம் உரையாடுவதற்கும் பேச்சுத்தொடர்பு கொள்வதற்கும் முன்முயற்சி எடுங்கள். அநேக ஆண்டுகளுக்கு, ஏன், வாழ்க்கை பூராவும் நெஞ்சாரப் போற்றி மகிழும் கனிவான உறவுகளை அது உருவாக்கலாம்.