“அவர்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை”
‘என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாய் [“சந்தோஷமுள்ளவர்களாய்,” NW] இருப்பீர்கள்’ என்று இயேசு கிறிஸ்து தமது சீஷர்களிடம் கூறினார். (மத்தேயு 5:11) யெகோவாவின் சாட்சிகள் இன்று சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால், கிறிஸ்துவின் போதனைகளுக்கும் முன்மாதிரிக்கும் இசைவாக, அவர்கள் ‘இந்த உலகத்தின் பாகமல்லாதவர்களாக’ இருக்கிறார்கள், அரசியலில் உறுதியாக நடுநிலை வகிக்கிறார்கள், எல்லாவித சூழ்நிலைகளிலும் கடவுளுக்கு உத்தமமாக நடக்கிறார்கள்.—யோவான் 17:14; மத்தேயு 4:8-10.
எஸ்டோனியா நாடு உட்பட முன்னாள் சோவியத் யூனியனில் வசித்துவந்த யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிலைத்திருந்தார்கள். இவர்களைப் பற்றி லூத்தரன் இறையியலாளரும் பைபிள் மொழிபெயர்ப்பாளருமான டாமாஸ் பால் என்பவர் கிரிக் கெஸட் கியூலா (கிராமத்தின் மத்தியில் ஒரு சர்ச்) என்ற தனது நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “1951, ஏப்ரல் 1-ம் தேதி அதிகாலை வேளையில் என்ன நடந்தது என்பதை அநேகர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களுடைய எல்லா ஆதரவாளர்களையும் ஒழித்துக்கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டது—மொத்தம் 279 பேர் பிடிக்கப்பட்டு சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். . . . நாடுகடத்தப்படுவதையோ சிறையில் அடைக்கப்படுவதையோ தவிர்க்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது; அதாவது விசுவாசத்தை மறுதலித்து ஒரு படிவத்தில் கையெழுத்துப் போட்டால் போதும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். . . . ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 353 பேர் சிறையில் தள்ளப்பட்டார்கள்; அதில் குறைந்தது 171 பேர் அவர்களுடைய சபைகளுடன் வெறுமனே கூட்டுறவு வைத்திருந்தவர்கள். சைபீரியாவிலும்கூட அவர்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை. . . . [எஸ்டோனியாவிலிருந்த லூத்தரன்] சர்ச் அங்கத்தினர்களில் பெரும்பாலோருக்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு இருந்ததைப் போன்ற விசுவாசமில்லை.”
உலகெங்கிலும் வாழும் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தல் மத்தியில் உண்மையுடன் நிலைத்திருப்பதற்குத் தேவையான பலத்திற்காக கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தங்களுடைய உண்மைத்தன்மைக்காக கிடைக்கும் பரிசு விலையேறப்பெற்றது என்பதை அறிவதில் அவர்கள் அகமகிழ்கிறார்கள்.—மத்தேயு 5:12.