தொலைதூர பயணம் பலன் தந்தது
“தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்ற தலைப்பில் லிசலாவில் மாவட்ட மாநாடு ஒன்று நடைபெற்றது; அதில் கலந்துகொள்வதற்கு போரால் பீடிக்கப்பட்ட ஒரு பகுதியிலிருந்து அக்கா தங்கை இருவர் நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டதாக காங்கோ மக்கள் குடியரசிலிருந்து வரும் அறிக்கை கூறுகிறது. மாநாட்டில் ஆன்மீக போதனையையும் கிறிஸ்தவ கூட்டுறவையும் அனுபவித்து மகிழ அவர்கள் ஏங்கினார்கள். அதோடு, கின்ஷாசாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்து வரும் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கும் மிகுந்த ஆவலாய் இருந்தார்கள். அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், கிளை அலுவலகத்திலிருந்து வருபவர்கள் எவரையும் பல ஆண்டுகளாக அவர்கள் சந்திக்கவில்லை. ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்கள்.
அவர்கள் தங்களுடைய சொந்த ஊரான பாசேகுசுவிலிருந்து லிசலாவுக்குக் கட்டுமரத்தில் பயணம் செய்தார்கள்; சுமார் 300 கிலோமீட்டர் தூரம் காட்டுப் பாதை வழியாகவும் இரண்டு ஆறுகள் வழியாகவும் பயணிக்க வேண்டியிருந்தது. இதற்கு மொத்தம் மூன்று வாரங்கள் எடுத்தன. அவர்கள் இருவரும் முறையே 3 ஆண்டுகளாகவும் 19 ஆண்டுகளாகவும் முழுநேர ஊழியம் செய்து வருகிறார்கள், அதனால் ராஜ்ய நற்செய்தியைப் பரப்புவதற்கு இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். வழியில் சுமார் 110 மணிநேரத்தை பிரசங்கிப்பதில் செலவழித்தார்கள், 200 துண்டுப்பிரதிகளையும் 30 பத்திரிகைகளையும் விநியோகித்தார்கள்.
நதியில் பயணம் செய்தபோது நீர்யானைகளையும் முதலைகளையும் கடந்து வரவேண்டியிருந்தது, இவையெல்லாம் இந்தப் பகுதியில் சர்வசாதாரணம். இராத்திரி நேரம் நதியில் பயணம் செய்ய முடியாது—இருட்டில் இத்தகைய ஆபத்தான பகுதியில் பயணம் செய்வது சாத்தியமற்றது! அநேக இராணுவ சோதனைச் சாவடிகளையும் அவர்கள் கடந்து வந்தார்கள்.
இது, தொலைதூரப் பயணமாகவும் களைப்பூட்டுவதாகவும் இருந்தபோதிலும், இந்தப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டதில் அந்த சகோதரிகளுக்கு மிக்க மகிழ்ச்சி. லிசலாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டபோது அவர்களுடைய நன்றியுணர்வும் சந்தோஷமும் பொங்கி வழிந்தன. சத்தியத்திற்கான ஆவல் அவர்களுடைய இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த மாநாட்டிற்கு வந்திருந்த 7,000 சகோதர சகோதரிகளோடு சேர்ந்திருந்தது அவர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மாநாடு முடிந்து வீடு திரும்பும் சமயத்திலும் இதே சவால்களை அவர்கள் எதிர்ப்பட்டார்கள். கடைசியில், தங்களுடைய குடும்பத்தார் இருக்கும் இடத்தை வந்தடைந்தபோது அவர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தார்கள்.