நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவி
எதிர்மறையான எண்ணங்கள் சில சமயங்களில் உங்களை ஆட்டிப்படைக்கின்றனவா? சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் எரிச்சலும் கோபமும் சோர்வும் வந்துவிடுகிறதா? வாழ்க்கையின் கவலைகள் உங்களை மூழ்கடித்துவிடுகின்றனவா? இவற்றிலிருந்து விடுபட உங்களுக்கு எது உதவும்?
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மனித வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு விஷயம். ஆனால் அவற்றை சரியாக கட்டுப்படுத்தும்போது வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாகிறது. “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்” என பைபிள் ஒத்துக்கொள்கிறது. (பிரசங்கி 7:7) வன்முறையும் விபத்துகளும் சர்வசாதாரணமாக காணப்படும் உலகில், உணர்ச்சி ரீதியில் பாதிக்கப்படாமல் இருப்பவர் யார்? என்றாலும் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லை.” (பிரசங்கி 3:22) ஆகவே, வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குவதற்கு, நம்பிக்கையான எண்ணங்களால் நம் மனதை நிரப்ப வேண்டும். நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்து, கேடு விளைவிக்கும் எண்ணங்களை எப்படி விட்டொழிக்கலாம்?
நடைமுறையான நடவடிக்கைகள் எடுப்பது எதிர்மறையான எண்ணங்களின் பாதிப்பைப் பெரும்பாலும் குறைக்கும். உதாரணமாக, நம்முடைய கட்டுப்பாட்டை மீறிய காரியங்களைப் பற்றியே நினைத்துக் கவலைப்படுவதைவிட அன்றாட வேலைகளையோ அல்லது சூழலையோ மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்காதா? காலார நடப்பது, இனிமையான இசையைக் கேட்பது, வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வது, அல்லது தேவையில் இருப்போருக்கு தயவாக உதவி செய்வது போன்றவை நம்முடைய சோர்வைக் குறைத்து மனசமாதானத்தைத் தரும்.—அப்போஸ்தலர் 20:35.
என்றபோதிலும், நம்முடைய படைப்பாளர்மீது முழுமையான நம்பிக்கை வைப்பதே எதிர்மறையான எண்ணங்களைத் தகர்த்தெறிவதற்கு மிகச் சிறந்த வழி. எதிர்மறையான எண்ணங்களால் தொடர்ந்து அவதிப்படும்போது நம்முடைய ‘கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுவது’ மிக அவசியம். (1 பேதுரு 5:6, 7) ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். . . . நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்’ என்று பைபிள் உறுதியளிக்கிறது. (சங்கீதம் 34:18, 19) கடவுள் நம்முடைய ‘துணையும் நம்மை விடுவிக்கிறவருமாயிருக்கிறவர்’ என்பதில் நாம் எப்படி நம்பிக்கையோடு இருக்கலாம்? (சங்கீதம் 40:17) பைபிளைப் படிப்பதன் மூலமும், கடவுள் தமது ஊழியர்களுடைய நலனில் எப்படியெல்லாம் தனிப்பட்ட அக்கறை காட்டியிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்களைத் தியானிப்பதன் மூலமும் நம்பிக்கையோடு இருக்கலாம்.