“கப்பலேறி, கடல் யாத்திரை” செய்கிறவர்கள்
அமெரிக்காவில், மாஸசூஸெட்ஸில் உள்ள கிளாஸ்டர் துறைமுகத்தைப் பார்த்தவாறு ஒரு வெண்கல சிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; புயலை எதிர்த்து தன் கப்பலைச் செலுத்தப் போராடும் ஒரு மாலுமியை அது சித்தரித்துக் காட்டுகிறது. கடலில் இறந்த ஆயிரக்கணக்கான கிளாஸ்டர் மீனவர்களின் நினைவுச் சின்னமாக அது விளங்குகிறது. அந்தச் சிலையின் அடியிலும் பக்கத்திலுள்ள கற்பலகையிலும் சங்கீதம் 107:23, 24 பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வசனங்கள் சொல்வதாவது: “கப்பலேறி, கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.”
அட்லாண்டிக் கடலின் வளமான மீன்பிடி பிராந்தியங்களில் உயிரைப் பணயம் வைத்துத்தான் ஒவ்வொரு முறையும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். பல வருடங்களாக, கிளாஸ்டரில் கிட்டத்தட்ட 5,368 மீனவர்களை கடல் காவு கொண்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது; அதன் தற்போதைய ஜனத்தொகை சுமார் 30,000. அங்குள்ள நினைவுச் சின்னத்தில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது: “வடகிழக்கிலிருந்து சீறிவரும் பேய்க் காற்றிலும் மலைபோல ஆக்ரோஷமாகப் பொங்கிவரும் அலைகளிலும் சிக்கி சிலர் உயிரிழந்தார்கள். மீன்பிடி பிராந்தியங்களுக்குப் பெரிய படகுகளிலிருந்து சிறிய படகுகளில் சென்ற சிலர் திரும்பிவர வழிதெரியாமல் உயிரிழந்தார்கள். கப்பல்கள் புயலில் ஒன்றோடொன்று மோதி பரிதாபமாக மூழ்கியதில் சிலர் உயிரிழந்தார்கள். இன்னும் சிலர், நீராவிக் கப்பல்களின் பாதையில் தங்களுடைய கப்பல் குறுக்கிட்டுச் சென்று அவற்றோடு மோதியதில் உயிரிழந்தார்கள்.”
அந்த நினைவுச் சின்னம், பல நூற்றாண்டுகளாக மீனவர்கள் பட்ட பாடுகளுக்கும் அவர்கள் எதிர்கொண்ட ஆபத்துகளுக்கும் ஒரு சோக அத்தாட்சியாக நிற்கிறது. கணவனை, அப்பாவை, சகோதரர்களை, அல்லது மகன்களை இழந்து தவித்தவர்களின் கதறலையும் கண்ணீரையும் சற்றுக் கற்பனைசெய்து பாருங்கள். ஆனால், யெகோவா தேவன் ஒருபோதும் விதவைகளையும், அநாதைகளையும், கடலில் மூழ்கி இறந்தவர்களையும் மறப்பதில்லை. எதிர்காலத்தில் நடக்கப்போவதை அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.” (வெளிப்படுத்துதல் 20:13) ஆம், ‘கடல் யாத்திரையில்’ மரித்தவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது ‘கர்த்தருடைய அதிசயமான கிரியைகளை’ நிச்சயம் காண்பார்கள்.