காதுகேளாதோரிடம் நற்செய்தியை அவர்கள் பிரசங்கிக்கிறார்கள்
“அவர்கள் உங்களை ஆன்மீக நபராக ஆக்குவார்கள்!” ஸ்பெயினில், மாட்ரிடிலுள்ள நாவால்கார்நேரோ என்ற இடத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தின் இயக்குநர் சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் ஏன் அவ்வாறு குறிப்பிட்டார்?
ரோசாஸ் டெல் காமினோ என்ற அந்த முதியோர் இல்லத்தில் வாழும் பெரும்பாலானோர் காதுகேளாதவர்கள். என்றாலும், யெகோவாவின் சாட்சிகள் முயற்சியெடுத்து ஸ்பானிய சைகை மொழியைக் கற்றுக்கொண்டிருப்பதால், அங்குள்ளோருடன் அவர்களால் ‘பேச’ முடிகிறது. பைபிள் பாடங்களை அவர்களுக்கு இலவசமாகக் கற்றுத்தருவதற்கு நேரம் செலவிடுகிறார்கள். அதற்காக, அந்த இல்லத்தின் இயக்குநர் அவர்களை வெகுவாக பாராட்டினார். ராஜ்ய நற்செய்தியைக் கற்றுக்கொண்டதால் அங்குள்ளவர்களிடம் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை அவர் கவனித்தார். அங்குள்ளவர்களும், குறிப்பாக கண் பார்வை இழந்தவர்களும் காதுகேளாதவர்களும், சாட்சிகள் வந்து தங்களைச் சந்திப்பதைப் பெரிதும் போற்றுகிறார்கள்.
அவர்களில் ஒருவரான யூலோஹீயோ என்பவருக்குக் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது. இன்று அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்துவருகிறார். ஒருநாள், யெகோவாவின் சாட்சி ஒருவர் அவருக்கு பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தார்; அப்போது ஒரு முதியவர் அவரிடம் ஒரு கவிதையைக் கொடுத்தார். அந்த இல்லத்தில் உள்ளவர்கள், தங்களுடைய போற்றுதலைத் தெரிவிப்பதற்காக இந்தக் கவிதையை எழுதியதாகச் சொன்னார். “ஒரு யெகோவாவின் சாட்சியாக . . .” என்பதே அந்தக் கவிதையின் தலைப்பு. அதன் ஒரு பகுதி இவ்வாறு சொல்கிறது: “அவர்களுடைய வாழ்க்கை திருப்தியானது, கட்டுப்பாடுமிக்கது. யெகோவாவிடமிருந்து அவர்கள் சந்தோஷத்தையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் வீடுகளுக்குச் சென்று ஜனங்களைச் சந்திக்கிறார்கள். ஏனெனில், யெகோவாமீது அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.”
ஆம், யெகோவா மீதுள்ள நம்பிக்கைதான் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள உலகெங்குமுள்ள அநேக சாட்சிகளைத் தூண்டியிருக்கிறது. இவ்விதமாக, பைபிளிலுள்ள நம்பிக்கை அளிக்கும் செய்தியைக் காதுகேளாதோரிடம் பிரசங்கிக்கிறார்கள்.