“சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி”
“கடவுளோடு நடவுங்கள்” என்ற தலைப்பில் 2004-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறு புத்தகமே மேலே காட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பதிப்பில் 32 பக்கங்கள் உள்ளன. அரபிக் முதல் ஹிந்தி வரை மொத்தம் 29 மொழிகளில் சுருக்கமான ஒரு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்ய நற்செய்தியைக் கூடுமானவரை எல்லோருக்கும் தெரிவிக்க உதவும் விதத்தில் இச்சிறு புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. (மத்தேயு 24:14) இச்சிறு புத்தகத்தைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் பலன்களை பின்வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.
• மாநாட்டில் இச்சிறு புத்தகத்தைப் பெற்ற பிறகு, யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் ஒரு குடும்பத்தார் மூன்று தேசிய பூங்காக்களுக்குச் சென்றார்கள். அங்கு இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆட்களைச் சந்தித்தார்கள். அந்தக் குடும்பத்தலைவர் இவ்வாறு சொல்கிறார்: “அந்த ஆட்களுக்கு ஆங்கிலத்தில் ஓரளவு பேச முடிந்தாலும், அவர்களுடைய சொந்த பாஷையில் ராஜ்ய செய்தியைக் காண்பித்தபோது அவர்களுக்கு ரொம்பவுமே பிடித்துவிட்டது. ஏனென்றால் அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருந்தார்கள். இது உலகளாவிய வேலை என்பதையும், நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதையும் அவர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.”
• ஒரு சகோதரி தன்னுடன் வேலை செய்யும் ஓர் இந்தியரிடம் அந்தச் சிறு புத்தகத்தைக் காட்டினார். அதில் எல்லா மொழிகளும் இருப்பதைப் பார்த்து அவர் பூரித்துப் போனார்; தன் சொந்த மொழியிலேயே ராஜ்ய செய்தியைப் படித்தார். அதன் பிறகு, அந்தச் சகோதரியால் பைபிளைப் பற்றி அவருடன் அதிகம் பேச முடிந்தது. அவருடன் வேலை பார்க்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்தச் சிறு புத்தகத்தில் தன் சொந்த மொழியைப் பார்த்ததும் பிரமித்துவிட்டார். அவரும்கூட யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள விரும்பினார்.
• ஒரு நேப்பாளப் பெண் கனடாவில் வசித்து வந்தாள்; தொலைபேசியில் யெகோவாவின் சாட்சி ஒருவருடன் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டாள், ஆனால் அந்தச் சகோதரியை தன் வீட்டிற்கு அழைக்க ஏனோ தயங்கினாள். என்றாலும், அந்தச் சகோதரி நேப்பாள மொழியில் செய்தி அடங்கிய ஒரு சிறு புத்தகம் தன்னிடம் இருப்பதாகச் சொன்னதுமே, அதிக உற்சாகத்தோடு அவரைத் தன் வீட்டிற்கு அழைத்தாள். தன் தாய் மொழியிலேயே அந்தச் செய்தியைப் படிக்கத் துடித்தாள்! அன்றிலிருந்து, அந்தப் பெண்ணுக்கு அவளுடைய வீட்டிலேயே பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது.