புத்தாண்டு மரம் ரஷ்ய சின்னமா?—கிறிஸ்தவ சின்னமா?
“1830-களின் ஆரம்பத்தில், ஊசியிலை மரத்தை வீடுகளில் வைப்பது ‘ஜெர்மனியரின் மனங்கவரும் பழக்கம்’ என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. 1830-களின் முடிவில், செ. பீட்டர்ஸ்பர்கில் வாழ்ந்த உயர்குடி மக்கள் தங்கள் வீடுகளில் இந்த மரத்தை வைப்பது ‘ஒரு சம்பிரதாயமானது’. . . . 19-ம் நூற்றாண்டில், சர்ச் குருமாரும் விவசாயிகளும் மட்டுமே இந்த மரத்தைத் தங்கள் வீடுகளில் வைக்கவில்லை. . . .
“19-ம் நூற்றாண்டிற்கு முன், இந்த மரம் . . . ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. ஏனென்றால் அது மரணத்தின் சின்னமாகவும், ‘ஆவி உலகத்தோடு’ சம்பந்தப்பட்டதாகவும் கருதப்பட்டது; அதுமட்டுமல்ல, மதுபானக் கடைகளின் கூரைமேல் இம்மரத்தை அலங்கரிப்பது ஜெர்மனியில் பழக்கமாக இருந்தது. ஆகவே, ரஷ்யர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் 19-ம் நூற்றாண்டின் மத்திபத்தில் அவர்களுடைய மனப்பான்மை மாறியது. . . . அவர்கள் அந்த மரத்தை ஏற்றுக்கொண்டார்கள்; காலப்போக்கில், மேற்கத்தியரைப் போலவே இம்மரத்தை கிறிஸ்மஸ் மரம் என்று அழைத்து அதை கிறிஸ்மஸ் பண்டிகையுடன் இணைத்தார்கள். . . .
“ரஷ்யாவில் இம்மரம் பல எதிர்ப்புகளின் மத்தியில்தான் ஒரு கிறிஸ்தவ சின்னமாக ஆனது. ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு வந்தது. புதிதாக ஆரம்பமான இந்தக் கொண்டாட்டத்தின்போது, இந்த மரம் வைக்கப்படுவது ‘பேய்த்தனமான செயல்’ என்றும், புறமதப் பாரம்பரியம் என்றும், மீட்பராகிய இயேசுவின் பிறப்போடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதது என்றும் சர்ச் குருமார் கருதினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு மேற்கத்திய பாரம்பரியம் என்றும் கருதினார்கள்.”—செ. பீட்டர்ஸ்பர்க் மாநிலப் பல்கலைக்கழகத்தின் மொழிநூல் பேரறிஞரான யெலெனா வி. டூஷென்கினா.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Photograph: Nikolai Rakhmanov