வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பூமியும் வானமும் “அழிந்துபோம்” என சங்கீதம் 102:26 சொல்கிறது. அப்படியானால் இந்தப் பூமி அழிக்கப்படுமென இது அர்த்தமாகுமா?
யெகோவாவிடம் ஏறெடுத்த ஒரு ஜெபத்தில் சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப் போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.” (சங்கீதம் 102:25, 26) இவ்வசனங்கள் பூமியின் அழிவைப் பற்றி அல்ல, ஆனால் கடவுளுடைய நித்தியத்துவத்தைப் பற்றியே பேசுகின்றன என்பதை அதன் சூழமைவு காட்டுகிறது. கடவுளுடைய ஊழியர்களுக்கு இந்த அடிப்படை உண்மை ஏன் ஆறுதல் அளிக்கிறது என்பதையும் அந்தச் சூழமைவு காண்பிக்கிறது.
சங்கீதக்காரன் தன்னுடைய துயரங்களை விவரித்தபடி தன் பாடலை ஆரம்பிக்கிறார்; அப்போது அவர் ஒருவேளை பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருக்கலாம். தன் வாழ்க்கை “புகையைப் போல்” சீக்கிரமாய் கடந்துபோகிறதெனச் சொல்லி வருந்துகிறார். சொல்ல முடியாத மனவேதனை அவருடைய உடலைப் பாழ்ப்படுத்தி, அவருடைய எலும்புகளை ‘ஒரு கொள்ளியைப் போல்’ ஆக்குகிறது. துளிகூட சக்தி இல்லாதவராக, ‘புல்லைப் போல் உலர்ந்துபோயிருக்கிறார்,’ அதோடு, “வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப் போல்” தனிமையாய் உணருகிறார். துயரங்கள் அவருடைய பசியை மறக்கடிக்கச் செய்திருக்கின்றன. அவருடைய நாட்கள் துக்கத்தால் நிறைந்திருக்கின்றன. (சங்கீதம் 102:3-11) இத்தனை கஷ்டங்கள் மத்தியிலும், அந்தச் சங்கீதக்காரன் நம்பிக்கை தளராமல் இருக்கிறார். ஏன்? சீயோனுக்கு, அதாவது எருசலேமுக்கு, யெகோவா அளித்திருந்த வாக்குறுதியே அதற்குக் காரணம்.
சீயோன் அழிக்கப்பட்டிருந்தாலும், அதைத் திரும்ப பழைய நிலைக்கே கொண்டுவரப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். (ஏசாயா 66:8) ஆகையால், சங்கீதக்காரன் நம்பிக்கையோடு யெகோவாவிடம் இவ்வாறு சொல்கிறார்: ‘தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது. [ஏனெனில்] கர்த்தர் [நிச்சயம்] சீயோனைக் கட்டுவார்.’ (சங்கீதம் 102:13, 15) எருசலேமைப் பற்றி குறிப்பிட்ட பிறகு, தன் சொந்த வேதனைகளை மீண்டும் சொல்ல ஆரம்பிக்கிறார். ஆம், பாழாக்கப்பட்ட எருசலேமையே பழைய நிலைக்குக் கொண்டுவர யெகோவாவுக்கு வல்லமை இருக்கிறதென்றால், பரிதாபகரமான நிலைமையிலிருந்து தன்னையும்கூட அவரால் நிச்சயம் காப்பாற்ற முடியும் என்று அவர் சொல்கிறார். (சங்கீதம் 102:16, 19, 23) யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்க மற்றொரு விஷயமும் சங்கீதக்காரனின் மனதைத் தூண்டுகிறது. அது என்ன? கடவுள் நித்தியமானவர் என்ற உண்மையே அது.
யெகோவாவின் நித்தியத்துவம் சங்கீதக்காரனின் அற்பாயுசோடு முற்றிலும் வேறுபடுகிறது. “உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்” என்று யெகோவாவிடம் அவர் சொல்கிறார். (சங்கீதம் 102:24) பிறகு, “நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது” என்று கூறுகிறார்.—சங்கீதம் 102:25.
என்றாலும்கூட, பூமி மற்றும் வானங்களின் நீண்ட ஆயுளை யெகோவாவின் நித்தியத்துவத்தோடு கொஞ்சமும் ஒப்பிட முடியாது. அதனால்தான், “அவைகள் [பூமியும் வானங்களும்] அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்” என்று அவர் தொடர்ந்தாற்போல் சொல்கிறார். (சங்கீதம் 102:26) சொல்லர்த்தமான பூமியும் வானங்களும் அழியக்கூடியவை. உண்மைதான், அவை என்றென்றும் நிலைத்திருக்கும் என யெகோவா வேறு வசனங்களில் தெரிவித்திருக்கிறார். (சங்கீதம் 119:90; பிரசங்கி 1:4) ஆனால் அவற்றை அழித்துவிட முடியும்—அது கடவுளுடைய நோக்கமாக இருந்தால். அதற்கு நேர்மாறாக, கடவுளோ அழியாதவர், அதாவது சாவே இல்லாதவர். சடப்பொருள் படைப்புகளை அவர் பராமரிப்பதன் காரணமாகவே அவற்றால் ‘சதாகாலங்களிலும் நிலைத்திருக்க’ முடிகிறது. (சங்கீதம் 148:6) யெகோவா அவற்றைப் புதுப்பிக்காமல் இருந்துவிட்டால், “அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்.” (சங்கீதம் 102:26) ஒரு மனிதனைவிட அவனது ஆடைகளுக்கு எப்படி நீண்ட ஆயுள் இருக்க முடியாதோ, அப்படியே யெகோவாவைவிட அவருடைய படைப்புகளுக்கு நீண்ட ஆயுள் இருக்க முடியாது—அது அவருடைய விருப்பமாக இருந்தால். என்றாலும், அது அவருடைய விருப்பம் அல்ல என்பதை வேறு வசனங்களிலிருந்து நாம் அறிந்திருக்கிறோம். சொல்லர்த்தமான பூமியும் வானங்களும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் யெகோவாவின் தீர்மானம் என்பதை அவருடைய வார்த்தை நமக்கு உறுதிப்படுத்துகிறது.—சங்கீதம் 104:5.
யெகோவா தமது வாக்குறுதிகளையெல்லாம் எப்போதும் நிறைவேற்றுகிறவர் என்று அறிவது மிகவும் ஆறுதல் அளிக்கிறது. எத்தகைய சோதனைகளை நாம் எதிர்ப்பட்டாலும், அவரிடம் கதறி அழும்போது, “திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்” என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். (சங்கீதம் 102:16) ஆம், நமக்குத் துணைபுரியப்போவதாக 102-ம் சங்கீதத்தில் யெகோவா அளித்திருக்கும் உறுதி, இதோ நாம் நின்றுகொண்டிருக்கிற இந்தப் பூமியைவிட பல மடங்கு உறுதியானது.