லாகானீ அவுனா மரத்தைப் போல் நீங்கள் இருக்கிறீர்களா?
பாப்புவா நியூ கினீயிலுள்ள போர்ட் மோர்ஸ்பியின் புறநகர் பகுதி கிராமத்தில் இரண்டு ஊழியர்கள் பிரசங்கித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நடந்துவருகையில் ஓர் அழகான மரத்தைப் பார்த்தார்கள். அப்போது, வயதான ஊழியர் இளவயது ஊழியரிடம் இப்படிச் சொன்னார்: “அடடே, இது லாகானீ அவுனா மரமாச்சே! இந்தப் பெயருக்கு ‘வருடாந்தர மரம்’ என்று அர்த்தம். இது வெப்ப மண்டலத்தில் இருக்கிற மற்ற அநேக மரங்களைப் போல் கிடையாது. ஒவ்வொரு வருடமும் இதனுடைய இலைகளெல்லாம் உதிர்ந்துவிடும், பார்ப்பதற்கு மரமே பட்டுப்போய்விட்டது போல் இருக்கும். ஆனால் மழைவந்த பிறகு மறுபடியும் இலைகள் துளிர்த்து, பூக்கள் பூத்து, அதன் அழகை மீண்டும் காண்பிக்கும்.”
இந்த லாகானீ அவுனா அல்லது ராயல் போயின்ஸியானா மரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது. உலகிலேயே மிகவும் அழகாக பூத்து குலுங்குகிற ஐந்து மரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது என சில வல்லுநர்கள் சொல்கிறார்கள். வறட்சி காலத்தில் இந்த மரத்தின் பூக்களும் இலைகளும் உதிர்ந்துபோனாலும் அது நிறைய தண்ணீரைக் குடித்து சேமித்து வைத்துக்கொள்கிறது. அதன் வேர்கள் உறுதியாக இருக்கின்றன, நிலத்தடியில் இருக்கும் பாறைகளைச் சுற்றி அவற்றால் வளர முடியும். அதனால் காற்று பலமாக அடித்தாலும் இந்த மரங்கள் தாக்குப்பிடித்துக்கொள்கின்றன. சுருங்கச் சொன்னால் கடினமான சூழ்நிலைகளையும் தாக்குப்பிடித்து செழிப்பாக இருக்கின்றன.
விசுவாசத்தை சோதிக்கிற சில சந்தர்ப்பங்களை நாம் எதிர்ப்பட நேரிடலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் உறுதியுடன் இருக்க எது உதவும்? இந்த லாகானீ அவுனாவைப் போல நாமும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கிற ஜீவத் தண்ணீரை நன்றாகக் குடித்து சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு ‘கற்பாறை போல்’ உறுதியாக இருக்கும் நம்முடைய யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் நாம் இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். (2 சாமுவேல் 22:3, பொது மொழிபெயர்ப்பு) இன்று யெகோவா நமக்குச் செய்கிற எல்லா ஏற்பாடுகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டால் பிரச்சினைகள் வந்தாலும் நம்முடைய ஆவிக்குரிய அழகையும் வளத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த லாகானீ அவுனா மரம் சிறந்த எடுத்துக்காட்டு. அப்படிச் செய்வதன் மூலம் யெகோவா நமக்கு வாக்களித்திருக்கிற ‘ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுவோம்.’ நித்திய ஜீவனையும் பெறுவோம்.—எபிரெயர் 6:11; வெளிப்படுத்துதல் 21:4.