“ஊதா நிற முக்கோணத்தின் அர்த்தம் என்ன?”
“சில நாட்களுக்கு முன், ஒரு யெகோவாவின் சாட்சியிடமிருந்து காவற்கோபுர பத்திரிகையைப் பெற்றேன்” என்று கொரிய குடியரசில் இருக்கும் சியோலில், நீதித்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் ஒருவர் எழுதினார். “அதை வாசித்தபோது, நாசி மற்றும் கம்யூனிஸ ஆட்சிகளின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டதைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொண்டேன். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். அந்த அட்டைப் படத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சீருடைகளின் இடது புறத்தில் தலைகீழான ஒரு முக்கோணம் இருந்ததே; அந்த ஊதா நிற முக்கோணத்தின் அர்த்தம் என்ன?”
ஜெர்மனியில் நாசி ஆட்சியின்போது, யெகோவாவின் சாட்சிகள் “ஹெய்ல் ஹிட்லர்” என்று சொல்ல மறுத்தனர்; அரசியல் மற்றும் ராணுவ விவகாரங்களில் நடுநிலை வகித்தனர். அதனால் நாசிக்கள் அவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து, சுமார் 12,000 சாட்சிகளை வெவ்வேறு காலப்பகுதிகளுக்கு சிறையிலும் சித்திரவதை முகாம்களிலும் தள்ளினர். கிட்டத்தட்ட 2,000 பேர் மரித்தனர், அவர்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
கைதிகளின் சட்டையில் இருந்த ஊதா நிற முக்கோணத்தின் அர்த்தம் என்ன? அனட்டமி ஆஃப் த எஸ்எஸ் ஸ்டேட் என்ற புத்தகம் இவ்வாறு விளக்குகிறது, “[நாசி] முகாம்களில் இருந்த பல வகைப்பட்ட கைதிகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காக வெவ்வேறு அடையாளக்குறிகள் இருந்தன. இப்படி அடையாளக்குறிகளை இடும் முறை போருக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது; அதன்படி, முக்கோண வடிவத் துணி ஒவ்வொரு கைதியினுடைய சீருடையிலும் தைக்கப்பட்டது, முக்கோண வடிவத் துணியின் நிறம் கைதிக்குக் கைதி வேறுபட்டது: அரசியல் கைதிகளுக்கு, சிவப்பு; யெகோவாவின் சாட்சிகளுக்கு, ஊதா; சமூக விரோதிகளுக்கு, கறுப்பு; சட்ட விரோதிகளுக்கு, பச்சை; ஓரினப்புணர்ச்சிக்காரர்களுக்கு, இளஞ்சிவப்பு; நாடுவிட்டு குடிபெயர்ந்தவர்களுக்கு, நீலம். யூத கைதிகளின் சீருடையில் அந்த முக்கோணத்தின் மேல் கூடுதலாக மஞ்சள் நிற முக்கோணமும் தைக்கப்பட்டது; அறுகோண வடிவில் தாவீதின் நட்சத்திரம் போல் இருப்பதற்காக அவ்வாறு தைக்கப்பட்டது.”
“ஊதா நிற முக்கோணம் புகட்டும் பாடத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டால், அது பெரும் அழிவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்; அதோடு, எல்லா மனிதருடைய பேரளவான மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத்தருகிற நல்வழியில் நடக்கவும் உதவும்” என்று ஹோலகாஸ்ட் பாலிடிக்ஸ் எனும் புத்தகத்தில் பேராசிரியர் ஜான். கே. ரோத் எழுதியுள்ளார். நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாய் நிற்கிறார்கள் என்ற, விருதுபெற்ற டாக்குமென்டரி படத்தை யெகோவாவின் சாட்சிகள் தயாரித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்க்க ஏற்பாடு செய்துதரும்படி நீங்கள் ஏன் ஒரு யெகோவாவின் சாட்சியைக் கேட்கக் கூடாது?