‘பலவீன பாத்திரத்தின்’ மதிப்பு
‘புருஷர்களே, மனைவியானவள் பலவீன பாண்டமாயிருக்கிறபடியினால் [அதாவது, பாத்திரமாயிருக்கிறபடியினால்], . . . நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, . . . அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்’ என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 3:7) பெண்களை ‘பலவீன பாத்திரம்’ என்று சொல்வதன் மூலம் பைபிள் அவர்களை எவ்விதத்திலாவது குறைத்து மதிப்பிடுகிறதா? பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்ட பேதுரு என்ன அர்த்தத்தில் இவ்வார்த்தைகளை எழுதினார் என்பதைச் சற்று கவனிக்கலாம்.
‘கனம் செய்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க சொற்றொடருக்கு “மதிப்பு கொடு, அருமையாக கருது, . . . மரியாதை செலுத்து” என்று அர்த்தம். மிகக் கவனமாகக் கையாள வேண்டிய விலையுயர்ந்த கண்ணாடிப் பொருளைப் போல மனைவியை கிறிஸ்தவ கணவன் மென்மையாக நடத்த வேண்டும்; அதைத்தான் அந்த வசனம் அர்த்தப்படுத்துகிறது, அது எவ்விதத்திலும் பெண்களின் மதிப்பைக் குறைப்பதில்லை. உதாரணமாக, இந்தப் படத்தில் உள்ள ‘டிஃப்பனி தாமரை விளக்கை’ கவனியுங்கள். இது கண்ணாடியால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருள். எளிதில் உடையும் தன்மைகொண்ட இந்த அழகிய விளக்கை ரொம்பவே கவனமாகக் கையாள வேண்டும். அதற்காக அதன் மதிப்பு குறைந்துவிட்டதாக அர்த்தமா? நிச்சயமாக இல்லை! 1997-ல் ஒரிஜினல் ‘டிஃப்பனி தாமரை விளக்கு’ 12 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் போனது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! கொஞ்சம் தவறினாலும் உடைந்துபோகிற அதன் தன்மை அதற்குரிய மதிப்பைக் கூட்டியதே தவிர, குறைக்கவில்லை.
அதேபோல, ஒரு பெண்ணை பலவீன பாத்திரமாய் கருதி கனப்படுத்துவது, எவ்விதத்திலும் அவளை இழிவுபடுத்துவதாக ஆகாது. ஒரு கணவன் “விவேகத்தோடு” வாழ்வதற்கு தன் மனைவியின் பலத்தையும் பலவீனத்தையும், விருப்பையும் வெறுப்பையும், எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். கரிசனை காட்டும் கணவன், தானும் தன் மனைவியும் குணங்களில் வித்தியாசப்படுவதைப் புரிந்து நடந்துகொள்கிறார். தன்னுடைய “ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு” அவளுக்குரிய மரியாதையைக் கொடுக்கிறார். (1 பேதுரு 3:7) தன் மனைவியின் பெண்மைக்குரிய இயல்புகளை மதிக்கத் தவறும் கணவன் கடவுளுடன் நல்லுறவை அனுபவிக்க முடியாது. ஆக, கடவுளுடைய வார்த்தை பெண்களின் மதிப்பை குறைப்பதில்லை, மாறாக அவர்களுக்கு மதிப்பையும் மரியாதையையுமே கொடுக்கிறது.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
© Christie’s Images Limited 1997