குழந்தைகளை கவனித்துக்கொள்வது டிவியா?
சில சமயங்களில் குழந்தைகளை ஜாலியாக டிவி பார்க்க விட்டுவிட்டு நீங்கள் நிம்மதியாக உங்கள் அன்றாட வேலையில் மூழ்கிவிடலாம். ஆனால், உங்கள் குழந்தைகளை இது எவ்வாறு பாதிக்கலாம்?
“டிவியில் காட்டப்படும் காட்சிகளால் சின்னக் குழந்தைகள்கூட பாதிக்கப்படுகிறார்கள்” என த நியு யார்க் டைம்ஸ் சொல்கிறது. இது சம்பந்தமாக, சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு சின்ன சின்ன காட்சிகள் காட்டப்பட்டன. ஒவ்வொரு காட்சியிலும் பொம்மையிடம் ஒரு நடிகை வித்தியாசமான முகபாவனைகளைக் காட்டினாள். “அவள் அந்தப் பொம்மையைப் பார்த்து பயந்ததுபோல் நடித்தபோது, குழந்தைகள் அந்த மாதிரியான பொம்மையை வைத்து விளையாடுவதை நிறுத்திவிட்டன; அதுமட்டுமல்ல, ரொம்பவே சோர்ந்துபோய் முகத்தைச் சுளித்துக்கொண்டு அழுவது போலவும் இருந்தன. ஆனால், அந்தப் பொம்மையிடம் அவள் சந்தோஷமாக விளையாடியபோது குழந்தைகள் அந்தப் பொம்மையை வைத்து விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டின” என்றும் அந்த டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
குழந்தைகளை டிவி பாதிக்கிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இது காலப்போக்கில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? ஜப்பான், குராஷிகி நகரில் உள்ள கவாசாகி மருத்துவ கல்லூரியின் குழந்தைகள் நல சிறப்புப் பிரிவின் பேராசிரியரான டாக்டர் நவோகீ கடாவோகா, எதற்குமே வாய்திறக்காத, முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாத அநேக குழந்தைகளை கவனித்திருக்கிறார். அவர்கள் எல்லாரும் எந்நேரமும் டிவி வீடியோவை பார்த்துக்கொண்டிருந்ததுதான் பிரச்சினை. இரண்டு வயது பையன் ஒருவனுக்கு மற்றவர்களோடு அவ்வளவாக பேசத் தெரியவில்லை. பேசுவதற்கு நிறைய வார்த்தைகளும் தெரியவில்லை. காரணம், அவன் ஒரு வயதிலிருந்தே தினசரி காலையிலிருந்து சாயங்காலம்வரை வீடியோ முன் பொழுதைக் கழித்திருந்தான். அவனுடைய அம்மா, டாக்டருடைய ஆலோசனையின்படி, பையனை வீடியோ பார்க்க விட்டுவிடாமல் அவனோடு விளையாட ஆரம்பித்தார். அதன் பிறகே அவனுடைய பேச்சுத்திறன் படிப்படியாக அதிகரித்தது. ஆம், பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பேசுவதும் விளையாடுவதும் அவசியம்.
குடும்பத்தை ஆரம்பித்து வைத்தவரான யெகோவா தேவன், ஒருவரோடொருவர் பேசுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அவர் தமது மக்களிடம் இவ்வாறு கூறினார். ‘நீ அவைகளை, [கடவுளுடைய வார்த்தையை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ (உபாகமம் 6:7) ஆகவே, பிள்ளைகளை சொல்லாலும் செயலாலும் சிறந்த வழியில், “நடக்க வேண்டிய வழியில்” நடத்த பெற்றோர்களால்தான் முடியும், டிவியால் அல்ல.—நீதிமொழிகள் 22:6.