என்னை முற்றிலும் மாற்றிய ஒரு சந்திப்பு
“கடவுள் என்னிடம் அனுப்பிய அந்த இரண்டு ‘தேவதூதர்களைப்’ பற்றி என் குடும்பத்திடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை” என்று ஒரு நபர் எழுதியிருந்தார். இவரை யெகோவாவின் சாட்சிகளான இரண்டு இளம் பெண்கள் ஊழியத்தில் சந்தித்திருந்தார்கள். இவர்கள் அவரைச் சந்திப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னால், 45 வருடங்கள் தன்னோடு வாழ்க்கை நடத்திய தன் மனைவியை மரணத்தில் பறிகொடுத்திருந்தார். அவர் ரொம்பவே நிலைகுலைந்து போயிருந்தார். வயதுவந்த அவருடைய பிள்ளைகள் அவருக்கு ஆறுதலாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் ரொம்ப தூரத்தில் வசித்து வந்தார்கள். நண்பர்களோ அக்கம்பக்கத்தாரோ ஒருவரும் அவரை வந்து பார்க்கவில்லை.
அந்த இளம் பெண்கள் அவரைச் சந்தித்தபோது, “இனியும் கடவுள்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு” என்றார். என்றாலும், அவர்கள் அனுதாபத்தோடு, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற பைபிள் சார்ந்த ஒரு சின்னத் துண்டுப்பிரதியை அவரிடம் கொடுத்தார்கள். அன்று மாலை அவர் அதைப் படித்தபோது ஆறுதலடைந்தார்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்கள் திரும்பவும் அவரைப் பார்க்கச் சென்றார்கள். முந்தைய சந்திப்பில் அவர் ரொம்பவே சோகமாக இருந்தது அவர்களுக்கு நினைவிருந்தது. அதனால் அவருடைய சுகநலத்தை விசாரிக்கச் சென்றார்கள். “முன்பின் தெரியாத அந்த இரண்டு புதியவர்கள் என்மேல் கரிசனையாக, என் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்களே என்று மிகவும் ஆச்சரியப்பட்டேன்” என்று அந்த நபர் பிறகு எழுதினார். பைபிளிலிருந்து அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயத்தால் அவர் உற்சாகமடைந்தார். அந்தப் பெண்கள் திரும்ப வருவதாகச் சொன்னார்கள். அந்த நபர் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததால், மேலே சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளூரில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு எழுதத் தூண்டப்பட்டார்.
அவர் தன் மகனுடைய வீட்டுக்கு அருகே குடிமாறி செல்வதற்கு முன் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கூட்டத்திற்குச் சென்றார். அவரை வந்து சந்தித்த இளம் பெண்களில் ஒருவருடைய குடும்பத்துடன் உணவும் அருந்தினார். அவர் இப்படியாக எழுதியிருந்தார்: “நான் இந்த இடத்தை விட்டுச் செல்கிறேன், ஆனால் அந்த இளம் பிள்ளைகளுக்கும், உங்களுடைய சர்ச்சுக்கும் என் இதயத்தில் என்றைக்கும் ஓர் இடமுண்டு. என் ஜெபத்திலும் உங்களை நினைத்துக் கொள்வேன். உங்களுக்குத் தெரியுமா, இப்பொழுதெல்லாம் நான் நிறைய ஜெபம் செய்கிறேன். நான் முற்றிலும் மாறிவிட்டேன். அதில் அந்த இளம் பெண்களுக்கு பெரும் பங்குண்டு, அவர்களுக்கு என்றைக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.”