“இன்றிலிருந்து, கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறேன்”
செக் குடியரசில் உள்ள ப்ராக்கில் வசிக்கும் அலெக்ஸாண்ட்ரா என்ற உக்ரேனியப் பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பேருந்துக்காக காத்து நின்ற இடத்தில், ஒரு சிறிய பை கீழே கிடந்ததைப் பார்த்தார். அது போவோர் வருவோரின் கால்களில் மிதிபட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பெண் அதை எடுத்து திறந்து பார்த்தபோது அவருடைய கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. கத்தை கத்தையாய் 5,000 கரணா பண நோட்டுகள்! அவரைச் சுற்றிலுமிருந்த யாருமே அந்தப் பைக்காக தேடுவதுபோல் தெரியவில்லை. செக் குடியரசில் வாழும் ஓர் அயல் நாட்டவரான அலெக்ஸாண்ட்ராவுக்கு, அன்றாடப் பிழைப்பே கடினமாக இருந்தது. இப்போது அவர் என்ன செய்வார்?
வீடு திரும்பிய பிறகு, அந்தப் பையை தன் மகள் விக்டோரியாவிடம் காட்டினார். பையின் சொந்தக்காரருடைய பெயர், விலாசம் ஏதாவது அதில் இருக்கிறதா என்று தேடினார்கள். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும், சில நம்பர்கள் எழுதப்பட்டிருந்த ஒரு துண்டுப் பேப்பர் அதில் இருந்தது. அந்தப் பேப்பரின் ஒரு பக்கத்தில் ஓர் அக்கௌண்ட் நம்பரும் மறுபக்கத்தில் இன்னும் சில நம்பர்களும் எழுதப்பட்டிருந்தன. மேலும், உள்ளூர் வங்கி ஒன்றிற்கு தெரிவிக்க வேண்டிய சில குறிப்புகளும் அந்தப் பையில் இருந்தன. அதோடு “3,30,000 கரணாக்கள்” (கிட்டத்தட்ட 4,80,000 ரூபாய்) என்று எழுதப்பட்ட துண்டுச்சீட்டும் அதில் இருந்தது. சரியாக அதேயளவு பணம் பையில் இருந்தது.
பேப்பரிலிருந்த ஒரு நம்பரைப் பார்த்தால் வங்கியின் போன் நம்பர் மாதிரி தெரிந்தது. அதை வைத்து வங்கிக்கு அலெக்ஸாண்ட்ரா பலமுறை போன் செய்தும் பலனில்லாமல் போனது. அதனால், அவரும் அவரது மகளும் நேரடியாக வங்கிக்கே போய் நடந்ததை சொன்னார்கள். அந்தப் பையிலிருந்த அக்கௌண்ட் நம்பரைப் பற்றி விசாரித்தனர். என்றாலும், அந்த வங்கியில் அப்படியொரு அக்கௌண்ட் நம்பரே இருக்கவில்லை. அடுத்த நாள், பையிலிருந்த இன்னொரு நம்பரை எடுத்துக்கொண்டு அலெக்ஸாண்ட்ரா வங்கிக்குச் சென்றார். அங்கு அக்கௌண்ட் வைத்துள்ள ஒரு பெண்ணின் நம்பர் அது என்ற விவரம் தெரியவந்தது. அலெக்ஸாண்ட்ராவும் விக்டோரியாவும் அந்தப் பெண்ணிடம் போனில் இதைப் பற்றிச் சொன்னார்கள், அவரும் தன்னுடைய பணம் காணாமல் போனது உண்மை என்று சொன்னார். அவர்கள் அனைவரும் நேரில் சந்தித்தபோது, அந்தப் பெண் சந்தோஷம்பொங்க அவர்களுக்கு நன்றி சொன்னாள். “பணத்தைத் திரும்பக் கொடுத்ததற்கு கைமாறாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“எங்களுக்கு ஒன்றும் வேண்டாம், எங்களுக்கு அந்த பணத்தின் மீது ஆசையிருந்திருந்தால், அதை நாங்களே வைத்து இருந்திருப்போமே” என்று பதிலளித்தார் விக்டோரியா. அவர் தனக்குத் தெரிந்திருந்த அரைகுறை செக் மொழியில் இவ்வாறு விளக்கினார்: “நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதால் இந்தப் பணத்தை உங்களிடம் திரும்பக் கொடுத்தோம். நாங்கள் பைபிள் சொல்கிறபடி நடப்பதால் எங்களுக்குச் சொந்தமில்லாததை வைத்துக்கொள்ள எங்கள் மனசாட்சி அனுமதிக்கவில்லை.” (எபிரெயர் 13:18) அந்தப் பெண் சந்தோஷமாக இப்படிச் சொன்னாள், “இன்றிலிருந்து, கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறேன்.”