முதுமை ஆனாலும் முடங்குவது இல்லை
முதுமை பிரச்சினையால் அநேகர் முடங்கிப்போகிறார்கள், சமுதாயத்திலுள்ள மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்கிறார்கள். ஆனால், ஃபெர்னான் ரீவரல் என்பவரின் விஷயமே வேறு. இவர் தனது 95-ம் வயதில் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் மரணமடைந்தார். அதுவரை அவர் தனியாக காலம் தள்ளினார். காரணம், அவருடைய மனைவி இறந்துவிட்டிருந்தார்; அவருடைய மகளும் திருமணமாகி தனிக்குடித்தனம் போய்விட்டிருந்தார். ஃபெர்னான் பொதுவாக வீட்டிலேயே அடைந்துகிடந்தாலும், தனிமையில் வாடவில்லை. ஹாலில் போடப்பட்டிருக்கும் மேசையின் முன்பு உட்கார்ந்துகொண்டு, கடவுளைப் பற்றி மக்களிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார்.
ஃபெர்னானுடைய விறுவிறுப்பான வாழ்க்கையில், சிறையில் முடங்கிப்போன காலமும் இருந்தது. ஏன்? 1939-ல் அவரும் அவரது மனைவியும் யெகோவாவின் சாட்சிகளாய் ஆனார்கள்; சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தார்கள். அச்சமயத்தில்தான், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. யாருக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்ற பைபிள் அடிப்படையிலான தீர்மானத்தில் ஃபெர்னான் உறுதியாயிருந்தார். அதனால், அவருடைய வேலையை இழந்தார், அவருடைய மனைவியையும் சின்னஞ்சிறு மகளையும் பிரிந்து ஐந்தரை வருடங்கள் வெவ்வேறு சிறைச்சாலைகளில் காலத்தைக் கழித்தார்.
கடந்த காலத்தைத் திரும்பிப்பார்த்து ஃபெர்னான் இப்படிச் சொன்னார்: “நான் நல்ல வேலையை விட்டுவிட்டு குடும்பத்தையும் நடுத்தெருவில் அம்போவென்று விட்டு சென்றுவிட்டதாக நிறைய பேர் நினைத்தார்கள். என்னை ஏசினார்கள்; ஒரு குற்றவாளியைப் போல நடத்தினார்கள். இருந்தாலும், அந்தக் கஷ்டமான வருடங்களில் யெகோவா எங்களைத் தாங்கியதையும் உதவியதையும் என்னால் மறக்கவே முடியாது. அதன்பிறகு எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன; ஆனால், யெகோவா மீது எனக்கிருந்த உறுதியான நம்பிக்கை மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது.”
இந்த விசுவாசம்தான் பைபிள் அளிக்கிற நம்பிக்கையைப் பற்றி தொலைபேசியில் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவரைத் தூண்டியது. ஆர்வமாக கேட்போருக்கு பைபிள் பிரசுரங்களை அவர் அனுப்பிவைப்பார். பிறகு, அந்தப் பிரசுரம் பிடித்திருந்ததா என்பதைக் கேட்க மீண்டும் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்வார். சிலர் அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதுவார்கள். அவற்றைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்படுவார்.
நீங்கள் வாழும் பகுதியிலும் ஃபெர்னானைப்போல ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்ளலாம். அவருடைய நம்பிக்கைகளைப்பற்றி தெரிந்துகொள்ள அவர் சொல்வதை நீங்களும் கேட்கலாம், அல்லவா? யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நம்பிக்கைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறார்கள்.