“வாழ்க்கையின் அர்த்தம் என்ன?”
“வா ழ்க்கையின் அர்த்தம் என்ன?” இது “ஒருவர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி” என்று நோபல் பரிசு பெற்றவரும் நாசி படுகொலையிலிருந்து தப்பியவருமான எலி வைசல் கூறினார்.
நீங்கள் எப்போதாவது இதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? அநேகர் யோசித்திருக்கிறார்கள்; ஆனால், அதற்குப் பதில் தெரியாமல் திண்டாடுகிறார்கள். வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி பிரிட்டிஷ் சரித்திராசிரியர் ஆர்னால்டு டாயின்பீ இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “கடவுளை மகிமைப்படுத்தி, அதனால் கிடைக்கிற மகிழ்ச்சியை என்றென்றும் அனுபவிப்பதுதான் வாழ்க்கையின் உண்மையான நோக்கம்.”
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஞானமுள்ள அரசராகிய சாலொமோனுக்கும் இதே கேள்வி எழுந்தது; ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், வாழ்க்கையைக் குறித்து கவனமாக ஆராய்ந்த பிறகு இந்த முக்கிய உண்மையை அவர் கண்டறிந்தார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.
இந்தக் கருத்தை கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவும் ஆதரித்தார். பூமியிலிருந்தபோது தம்முடைய பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்த அவர் மும்முரமாக முயன்றார். படைப்பாளருக்கு சேவை செய்தது அவருடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. அது அவருக்கு ஊக்கமளித்தது. அதனால்தான், “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்று அவரால் சொல்ல முடிந்தது.—யோவான் 4:34.
அப்படியானால், வாழ்க்கையின் அர்த்தம் என்ன? கடவுளுடைய விருப்பத்திற்கு இசைவாக வாழ்வதுதான். அப்போது மட்டுமே, நம்முடைய வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகவும் மட்டில்லா மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். இதைத்தான் இயேசுவும் சாலொமோனும் கடவுளுடைய மற்ற அநேக ஊழியர்களும் செய்தார்கள். கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்குவது எப்படி என்று அதிகமாக தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? (யோவான் 4:24) “வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” என்ற கேள்விக்கான பதிலைப் பெற உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ விரும்புகிறார்கள்.