ஒரு நீதிபதி பாடம் கற்றுக்கொள்ள முடியுமா?
ஸ்லட்யனா என்ற யெகோவாவின் சாட்சி குரோஷியா நாட்டில் வாழ்கிறார்; இவர், ஏதோ பண விவகாரங்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. குறித்த நேரத்தில் அவர் நீதிபதி முன்பாக ஆஜரானார். ஆனால், சம்பந்தப்பட்ட மற்றொரு நபர் இன்னும் வராதிருந்தார். ஸ்லட்யனா சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுக்க ரொம்ப ஆசைப்பட்டார். எல்லாரும் காத்திருக்கும் அந்த வேளையில் நீதிபதியிடம் பேசுவதற்குத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்.
“நீதிபதி அவர்களே, சீக்கிரத்தில் இந்தப் பூமியில் எந்த நீதிபதிகளும் இருக்க மாட்டார்கள், எந்த நீதிமன்றங்களும் இருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
அந்த நீதிபதியோ வாயடைத்துப்போனார், அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சீக்கிரத்திலேயே வழக்கு விசாரணை ஆரம்பமானது. விசாரணை முடிந்ததும், ஓர் ஆவணத்தில் கையெழுத்துப் போட ஸ்லட்யனா எழுந்து நின்றார்; அப்போது நீதிபதி சற்று சாய்ந்து, யார் காதிலும் விழாதபடி அவரிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டார்: “சீக்கிரத்தில் எந்த நீதிபதிகளும் இருக்க மாட்டார்கள் எந்த நீதிமன்றங்களும் இருக்காது என்று சொன்னீர்களே, அது உண்மைதானா?”
“உண்மைதான் நீதிபதி அவர்களே. அது மறுக்க முடியாத உண்மை!” என்று ஸ்லட்யனா பதில் அளித்தார்.
“அதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?” என்று நீதிபதி கேட்டார்.
“அது பைபிளில் இருக்கிறது” என்று ஸ்லட்யனா பதில் அளித்தார்.
அத்தகைய ஆதாரத்தை தான் வாசித்துப் பார்க்க விரும்புவதாக நீதிபதி தெரிவித்தார்; ஆனால், அவரிடம் பைபிள் இல்லை. எனவே, ஒரு பைபிளைக் கொண்டுவந்து தருவதாக ஸ்லட்யனா சொன்னார். அந்த நீதிபதியைச் சந்திக்க யெகோவாவின் சாட்சிகள் சென்றார்கள், ஒரு பைபிளை அவருக்குக் கொடுத்தார்கள், வாராந்தர பைபிள் படிப்பில் கலந்துகொள்ளும்படி அவரை ஊக்கப்படுத்தினார்கள். நீதிபதியும் அப்படிப் படிக்க ஒப்புக்கொண்டார், சீக்கிரத்திலேயே அவரும் யெகோவாவின் சாட்சியாய் ஆகிவிட்டார்.
சங்கீதம் 2:10-ல் (ஈஸி டு ரீட் வர்ஷன்) தீர்க்கதரிசனமாக இவ்வாறு சொல்லப்படுகிறது: “எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். அரசாளுபவர்களே [அதாவது, நீதிபதிகளே], இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.” இத்தகையவர்கள் யெகோவாவின் அன்பான வழிநடத்துதலை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும்போது அது எவ்வளவு இதமாய் இருக்கிறது!
[பக்கம் 32-ன் படம்]
நீதிபதியுடன் ஸ்லட்யனா