உயிரையும் மக்களையும் நேசித்தவர்
சகோதரர் டானியேல் ஸிட்லிக், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவில் நீண்ட காலம் பணியாற்றியவர்; ஏப்ரல் 18, 2006, செவ்வாய்கிழமை அன்று அவருடைய பூமிக்குரிய சேவை முடிவுக்கு வந்தது. அப்போது அவருக்கு 87 வயது. நியு யார்க், புரூக்ளினிலுள்ள பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினராக கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் சேவை செய்திருக்கிறார்.
நெருங்கிய நண்பர்களால் சகோதரர் டான் என பாசத்தோடு அழைக்கப்பட்ட அவர் 1946-ல் பெத்தேல் சேவையில் அடியெடுத்து வைத்தார். அதற்கு முன்னர், கலிபோர்னியாவில் விசேஷ பயனியராக சேவை செய்தார்; அதோடு, இரண்டாம் உலகப் போரின்போது, கிறிஸ்தவ நடுநிலை வகித்ததால், சிறையிலும் சில காலங்களைக் கழித்திருக்கிறார். அப்போது அவருக்கு கிடைத்த அனுபவங்கள் அவருடைய வாழ்க்கைச் சரிதையில் தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன; இது, 1985-ஆம் ஆண்டு ஜூன் 1 தேதியிட்ட, ஆங்கில காவற்கோபுரத்தில் “தேவனே, உம்மோடுள்ள நட்பு என்னே மதிப்புமிக்கது!” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
சகோதரர் ஸிட்லிக் எல்லாரிடமும் சாதாரணமாகப் பழகுவார் சிநேகப்பான்மையாக நடந்துகொள்வார், அணுகத்தக்கவராக இருந்தது அனைவரும் அறிந்ததே. “உயிருள்ள மெய்க் கடவுளுக்குச் சேவை செய்ய உயிரோடிருப்பது எவ்வளவு சந்தோஷம்” என்ற வார்த்தைகளுடன்தான் பெத்தேல் குடும்பத்தின் காலைநேர தினவசன கலந்தாலோசிப்பை அவர் பொதுவாக ஆரம்பிப்பார்; இது அவருடைய நம்பிக்கையான மனநிலையையும் உயிரை அவர் நேசித்ததையும் காட்டுகிறது. அவருடைய பொதுப் பேச்சுகளின் மூலமாக இத்தகைய மனநிலையை வளர்த்துக்கொள்ள மற்றவர்களை ஊக்குவித்தார்; “யெகோவாவை தெய்வமாகக் கொண்ட ஜனம் சந்தோஷமுள்ளது,” யெகோவாவின் சந்தோஷத்தைப் பிரதிபலித்தல்,” “ஆவியின் அனலை அணையாமல் காத்திடுங்கள்,” “தலைசிறந்தது விரைவில் வரவிருக்கிறது” போன்ற தலைப்புகளில் பொதுப் பேச்சுகளைக் கொடுத்தார்.
சகோதரர் ஸிட்லிக் இங்கிலாந்தைச் சேர்ந்த மாரினா ஹாட்ஸன் என்பவரை 1970-ல் மணந்தார்; அவரை “கடவுள் தந்த துணை” என்று சொன்னார். 35-க்கும் அதிகமான ஆண்டுகள் தம்பதிகளாக அவர்கள் யெகோவாவுக்கு சேவை செய்திருக்கிறார்கள்.
பெத்தேலில் இருந்தபோது, சகோதரர் ஸிட்லிக் அச்சகத்திலும், ரைட்டிங் டிப்பார்ட்மென்ட்டிலும் அதோடு இன்னும் பல்வேறு டிப்பார்ட்மென்டுகளிலும் சேவை செய்திருக்கிறார். WBBR ரேடியோ ஸ்டேஷனிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். பின்னர், நவம்பர் 1974-ல் ஆளும் குழு அங்கத்தினராக நியமிக்கப்பட்டார்; அப்போது பெர்சனல் மற்றும் ரைட்டிங் கமிட்டிகளோடும் சேர்ந்து வேலை செய்தார்.
சகோதரர் ஸிட்லிக் 30-க்கும் அதிகமான ஆண்டுகள் பெர்சனல் கமிட்டியில் பணியாற்றியபோது, மக்கள்மீது அவருக்கிருந்த ஆழ்ந்த அன்பு முனைப்பாய்த் தெரிந்தது. யெகோவாவைச் சேவிப்பதற்கு நமக்கிருக்கும் பொன்னான வாய்ப்புக்கு கணீர் குரலில் எப்போதுமே கவனத்தைத் திருப்புவார்; அவருடைய பேச்சால் ஊக்குவிக்கப்பட்டவர்கள் ஏராளம். உண்மையான சந்தோஷம் வேறெதன் மீதும் அல்ல, யெகோவாவுடன் நமக்குள்ள உறவிலும், வாழ்க்கையை நாம் கருதும் விதத்திலும்தான் சார்ந்திருக்கிறது என்பதை அடிக்கடி வலியுறுத்தினார்.
சகோதரர் ஸிட்லிக்கின் மரணம் பெத்தேல் குடும்பத்தினருக்கு மாபெரும் இழப்பே; இருந்தபோதிலும் உயிரையும் மக்களையும் உண்மையில் நேசித்த அவருடைய முன்மாதிரி அவர்களுடைய நெஞ்சைவிட்டு என்றும் நீங்காது. வெளிப்படுத்துதல் 14:13-ல் விவரிக்கப்பட்ட நபர்களில் அவரும் ஒருவர் என்பதில் நாம் திடநம்பிக்கையுடன் இருக்கிறோம்: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள்; . . . அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார்.”