நூறு வயதானவர் வாழ்க்கையில் ஒரு நோக்கத்துடன்
சுவீடனில் 105 வயது அல்லது அதற்கும் அதிக வயதுள்ள 60 பேர்களில் எலின் என்பவரும் ஒருவர். அவருக்கு இப்போது 105 வயது. அவர் முதியோர் இல்லத்தில் அடைந்து கிடந்தாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்; 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுறுசுறுப்பான ஒரு யெகோவாவின் சாட்சியாக அவர் தொடர்ந்து சேவை செய்கிறார்.
வீட்டுக்காவலில் இருந்த சமயத்தில் அப்போஸ்தலன் பவுல் வைத்த முன்மாதிரியைப் பின்பற்றி எலின் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிறார். பவுல் தன்னைப் பார்க்க வந்த எல்லோருக்கும் பிரசங்கித்தார். (அப்போஸ்தலர் 28:16, 30, 31) அதேபோல், எலினும், முதியோர் இல்லத்தைச் சுத்தம் செய்பவர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவர்கள், முடி திருத்துபவர்கள், நர்ஸுகள் ஆகியோரிடமும் அங்கே அவர் சந்திக்கும் மற்றவர்களிடமும் பைபிளில் இருக்கும் நற்செய்தியைச் சொல்கிறார். எலினுடைய சபையிலுள்ள சகோதர சகோதரிகள் தங்களுடைய வேதப்படிப்பு மாணவர்களை இடையிடையே அவரைச் சந்திக்க அழைத்து வருகின்றனர். அப்படிச் செய்வதால் அவருடைய அறிவினாலும் அனுபவத்தினாலும் அவர்கள் பயனடைகிறார்கள்.
எலினுடைய அருமையான குணங்களையும் ஆர்வத்தையும், அவருடைய சபையிலுள்ளவர்கள் பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றி ஒரு சகோதரர் இவ்வாறு கூறுகிறார்: “சபையில் நடக்கும் காரியங்களை அறிந்து வைத்திருப்பதில் அவருக்கு அபார திறமை இருக்கிறது. சபையிலுள்ள எல்லாக் குழந்தைகளின் பெயர்களையும், சபைக்கு மாறிவந்த புதியவர்களின் பெயர்களையும் ஞாபகம் வைத்திருக்கிறார்.” அதுமட்டுமல்ல, அவருடைய உபசரிக்கும் தன்மையையும், நகைச்சுவை உணர்வையும், வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையான மனநிலையையும் அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.
எலின் தன்னுடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளவும், வாழ்க்கையில் தான் கொண்டிருக்கும் நோக்கத்தில் ஒருமுகமாக இருக்கவும் எது உதவுகிறது? அவர் ஒவ்வொரு நாளும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிற்றேட்டிலிருந்து ஒரு வசனத்தைப் படிக்கிறார். மேலும், பூதக்கண்ணாடியின் உதவியால் ஒவ்வொரு நாளும் பைபிளின் ஒரு பகுதியைப் படிக்கிறார். யெகோவாவின் சாட்சிகளுடைய வாராந்தரக் கூட்டங்களுக்குத் தயாரிக்கிறார். அந்தக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், அங்கு பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை போட்டுகேட்கிறார். நம்முடைய வயது என்னவாக இருந்தாலும்சரி, பைபிளை, பைபிள் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதும், கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதும் திருப்தியான, நோக்கமுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவும்.—சங்கீதம் 1:2; எபிரெயர் 10:24, 25.