கிறிஸ்துவின் வருகை—நாம் பயப்பட வேண்டுமா?
இயேசு கிறிஸ்துவின் வருகை என்றதும் உங்கள் மனத்திரையில் என்ன காட்சி ஓடுகிறது? அது மனித இனத்தின் இறுதி அத்தியாயம் என நினைக்கிறீர்களா? தண்டனைத்தீர்ப்பும் அழிவும் கைகோர்க்கும் நேரம் என எண்ணுகிறீர்களா? அல்லது நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா? கிறிஸ்துவின் வருகை நம்மைக் கதிகலங்க வைக்கும் ஒன்றா? அல்லது நாம் ஆவலோடு எதிர்பார்க்க வேண்டிய ஒன்றா?
கிறிஸ்துவின் வருகையைப் பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதோ! அவர் மேகங்கள்மீது வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; . . . அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர்.” (வெளிப்படுத்துதல் [திருவெளிப்பாடு] 1:7, பொது மொழிபெயர்ப்பு) இந்த வருகை, நேர்மையாய் நடப்பவர்களுக்கு நன்மையையும் பொல்லாதவர்களுக்குத் தண்டனையையும் அளிக்க எதிர்காலத்தில் இயேசு வெளிப்படுவதைக் குறிக்கிறது.
கிறிஸ்துவின் வருகையைக் குறித்து பயப்படுவதற்குப் பதிலாக, அப்போஸ்தலன் யோவான் அதற்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். இந்த வருகையையும் அதனால் பூமியில் ஏற்படவிருக்கும் மாற்றத்தையும் பற்றி யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட பிறகு, “கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று உருக்கமாக ஜெபித்தார். (வெளிப்படுத்துதல் 22:20) ஆனால், ‘அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவது’ ஏன்? ‘அனைவரும் அவரைக் காண்பது’ எப்படி? கிறிஸ்துவின் வருகை எதைச் சாதிக்கும்? அதில் விசுவாசம் வைப்பது நமக்கு இப்போது எப்படி பயனளிக்கலாம்? இக்கேள்விகளுக்கு பதிலை அடுத்த கட்டுரையில் காணலாம்.