‘அவள் எங்களை இணங்க வைத்தாள்’
உபசரிப்பு. இதற்குக் கீழைநாடுகள் பெயர்பெற்றவை. உதாரணத்திற்கு, இந்தியாவில் ஒருவருடைய வீட்டுக்கு எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால் அவரை உபசரிப்பதற்காக அவ்வீட்டார் தங்கள் சாப்பாட்டைக்கூட தியாகம் செய்துவிடலாம். ஈரானில் வசிக்கும் ஒரு தாய், திடீரென விருந்தாளிகள் வந்தாலும் உபசரிப்பதற்காக குளிர்பதனப் பெட்டி நிறைய உணவுப் பொருள்களை எப்போதும் சேகரித்து வைக்கிறார்.
இத்தகைய தாராள குணம், பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பலரிடம் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அப்படிப் பெயரெடுத்தவர்களில் ஒருத்திதான் லீதியாள்; மக்கெதோனியா மாகாணத்திலுள்ள முக்கிய நகரமான பிலிப்பியைச் சேர்ந்த இவள், ஒருவேளை யூத மதத்திற்கு மதம் மாறியவளாக இருக்கலாம். ஒரு சமயம் ஓய்வுநாளின்போது, பிலிப்பி பட்டணத்திற்கு வெளியே இருந்த ஆற்றங்கரையில் லீதியாளும் இன்னும் சில பெண்களும் இருப்பதை அப்போஸ்தலன் பவுலும் அவருடைய பயணத் தோழர்களும் பார்த்தார்கள். அப்போது பவுல் கொடுத்த பேச்சைக் கேட்கையில் யெகோவா அவளுடைய உள்ளத்தைத் திறந்தார். விளைவு? அவளும் அவளுடைய வீட்டாரும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். பிறகு, “நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்” என்று அந்தப் பயணிகளை அவள் வருந்திக் கேட்டுக்கொண்டாள். ‘அவள் எங்களை இணங்க வைத்தாள்’ என்று பவுலின் தோழரான லூக்கா குறிப்பிடுகிறார்.—அப்போஸ்தலர் 16:11-15, பொது மொழிபெயர்ப்பு.
லீதியாளைப் போலவே, இன்றைய கிறிஸ்தவர்களும் பயணக் கண்காணிகள், அவர்களுடைய மனைவிகள் என சக விசுவாசிகளை உபசரிக்கிறார்கள். இவ்வாறு உபசரிப்போர் ‘அவர்களை இணங்க வைக்கிறார்கள்.’ அதன் பலனாக, உபசரிப்போர் ஊக்கம் தரும் உரையாடலையும் ஆன்மீக கூட்டுறவையும் அனுபவிக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலோர் பணவசதியுடன் இல்லாவிட்டாலும் அவர்கள் ‘அந்நியரை உபசரிக்க நாடுகிறார்கள்.’ (ரோமர் 12:13; எபிரெயர் 13:2) வாரி வழங்கும் குணம் அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. பின்வருமாறு இயேசு சொன்னது உண்மையிலேயே சரியாக இருக்கிறது: “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [அதாவது, சந்தோஷம்].”—அப்போஸ்தலர் 20:35.