“கர்த்தாவே ஏன் மெளனமாய் இருந்தீர்?”
இந்த வார்த்தைகள் போப் பதினாறாம் பெனடிக்டால் சொல்லப்பட்டவை; அவர் மே 28, 2006-ல் போலந்திலுள்ள ஆஷ்விட்ஸ்-ல் இருக்கும் முன்னாள் சித்திரவதை முகாமுக்குச் சென்றார். அது, லட்சக்கணக்கான யூதர்களும் மற்றவர்களும் நாசிக்களால் கொல்லப்பட்ட இடம். அவர் அங்கு இருந்தபோது இவ்வாறு சொன்னார்: “எத்தனை எத்தனை கேள்விகள் இந்த இடத்தில் எழுகின்றன! அந்த நாட்களில் கடவுள் எங்கே இருந்தார்? அவர் ஏன் மெளனமாக இருந்தார்? தீமையின் வெற்றியான இந்த எண்ணற்ற படுகொலைகளை அவர் எப்படித்தான் அனுமதித்தாரோ? இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து மனதிற்குள் வந்துகொண்டே இருக்கின்றன. . . . நாம் தொடர்ந்து மனத்தாழ்மையாகவும் அதேசமயத்தில் இடைவிடாமலும் கடவுளிடம் இவ்வாறு ஜெபிக்க வேண்டும்: ‘எழும்பி வாரும்! உமது படைப்பான மனிதகுலத்தை மறந்து விடாதேயும்!’”
போப்பின் பேச்சுக்கு காரசாரமான விமர்சனங்கள் எழுந்தன. போப் வேண்டுமென்றே சில விஷயங்களைக் குறித்து பேசுவதைத் தவிர்த்து விட்டதாக சிலர் கூறினார்கள்; உதாரணமாக, ஆஷ்விட்ஸில் நடந்த கொடுஞ்செயல்களுக்குக் காரணம் யூதர்களுக்கு எதிரான பகைதான் என்பதைக் குறித்து அவர் பேசவில்லையென கூறினார்கள். போப் இரண்டாம் ஜான் பால், சர்ச் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்; அது அநாவசியம் என்பதுபோல் காட்ட முயன்றதாக மற்றவர்கள் அவருடைய வார்த்தைக்கு விளக்கமளித்தார்கள். கத்தோலிக்க பத்திரிகையாளரான ஃபீலீபோ ஜென்டீலோனீ என்பவர் இவ்வாறு சொன்னார்: “என்றாலும், கடவுள் எங்கே இருந்தார் என்பது பதில் கிடைக்காத குழப்பமான கேள்வி என்பதால் அதற்குப் பதிலாக, பன்னிரண்டாம் பயஸ் எங்கே இருந்தார்? என்ற சுலபமான கேள்விக்குப் பதிலளிக்குமாறு அநேக விமர்சகர்கள் அவரிடம் கேட்டார்கள்.” அந்தப் படுகொலையைக் கண்டிக்காமல் மெளனமாயிருந்த போப் பன்னிரண்டாம் பயஸைக் குறித்தே அந்த விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அந்தப் படுகொலையும் மனித சரித்திரம் முழுவதிலும் செய்யப்பட்ட மற்ற எல்லா இனப்படுகொலைகளும், ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்ற வார்த்தைகளை நிரூபிக்கின்றன. (பிரசங்கி 8:9) அல்லாமலும், நடக்கும் ஏராளமான படுபயங்கர சம்பவங்களைப் பார்த்துக்கொண்டு மனிதனைப் படைத்தவர் மௌனமாய் இருக்கவில்லை. அக்கிரமத்தை அனுமதித்திருப்பதற்கான காரணங்களை அவர் பைபிள் வசனங்களின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், மனிதகுலத்தை தாம் மறந்துவிடவில்லையென கடவுள் உறுதியும் அளித்திருக்கிறார். உண்மையில், மனிதனை மனிதன் ஆளுவதற்குக் கடவுள் அனுமதித்திருக்கிற காலம் வெகுவிரைவில் முடிவுக்கு வரப்போகிறது. (எரேமியா 10:23) கடவுள் நமக்காக வைத்திருக்கும் நோக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? போப் பதினாறாம் பெனடிக்டுக்குப் புரியாத புதிராக இருந்த கேள்விகளுக்கான பதிலை பைபிளிலிருந்து தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு சந்தோஷமாய் உதவுவார்கள்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Oświęcim Museum