‘முதிர்வயதிலும் கனிதருவார்கள்’
மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள தேசங்களில் வாழும் அநேகர் தங்கள் தோட்டங்களில் பேரீச்சை மரங்களை நடுகிறார்கள். ஒயிலாக வளர்ந்து நிற்கிற இந்த மரங்கள் அவற்றின் அழகுக்கும் தித்திப்பான பழங்களுக்கும் பேர்போனவை. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேலும்கூட இம்மரங்கள் கனிதருகின்றன.
பூர்வ இஸ்ரவேலின் சாலொமோன் ராஜா, அழகின் பிம்பமான சூலேமியப் பெண்ணை கவிதை நடையில் வர்ணிக்கையில் அவளுடைய உயரத்தைப் பேரீச்சை மரங்களோடு ஒப்பிட்டார். (உன்னதப்பாட்டு 7:7, NW) பிளான்ட்ஸ் ஆஃப் த பைபிள் என்ற புத்தகம் சொல்வதாவது: “பேரீச்சை மரத்திற்கான எபிரெய வார்த்தை ‘தாமார்.’ . . . யூதர்கள் இதை எழிலுக்கும் ஒயிலுக்கும் அடையாளமாகக் கருதினார்கள். இதை அவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கு பெயராகச் சூட்டினார்கள்.” உதாரணமாக, சாலொமோனின் ஒன்றுவிட்ட தங்கைக்கு தாமார் என பெயர் சூட்டப்பட்டது. (2 சாமுவேல் 13:1) இன்றும்கூட சில பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு இந்தப் பெயரைச் சூட்டுகிறார்கள்.
அழகான பெண்கள் மட்டுமே பேரீச்சை மரங்களோடு ஒப்பிடப்படுவதில்லை. “நீதிமான் பனையைப்போல் [“பேரீச்சை மரம்,” பொது மொழிபெயர்ப்பு] செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். . . . அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 92:12-15.
அடையாள அர்த்தத்தில் சொன்னால், முதிர் வயதில் கடவுளை உண்மையோடு சேவிக்கிறவர்களுக்கும் எழில் மிகுந்த பேரீச்சை மரத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 16:31) வயது ஏற ஏற முதியவர்கள் தங்களுடைய உடல் பலத்தை இழந்தாலும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை தவறாமல் படிப்பதன்மூலம் தங்களுடைய ஆன்மீகப் பலத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். (சங்கீதம் 1:1-3; எரேமியா 17:7, 8) கடவுள் பயமுள்ள முதியவர்களின் கனிவான வார்த்தைகளும் சிறந்த முன்மாதிரியும் மற்றவர்களுக்கு உற்சாக ஊற்றாக இருக்கின்றன. அதோடு, இவர்கள் வருடாவருடம் நல்ல கனிகளையும் கொடுத்துவருகிறார்கள். (தீத்து 2:2-5; எபிரெயர் 13:15, 16) எனவே, தள்ளாத வயதிலும் முதியவர்களால் பேரீச்சை மரத்தைப் போலவே செழித்தோங்கி கனிதர முடியும்.