உலக ஒற்றுமை சாத்தியமா?
நமது உலகம் அமைதியை நோக்கிப் பயணிக்கிறதா, அழிவை நோக்கிப் பயணிக்கிறதா? இவ்விரண்டு கருத்துகளையும் ஆதரித்து விவாதிக்க முடியும் போல் தோன்றுகிறது.
ஒருபுறம் பார்த்தால், உலகளாவிய சமாதானம் சாத்தியமே என உலகத் தலைவர்களில் சிலர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். உலகளவில் சமாதானம் வரவில்லையென்றால் இவ்வுலகின் கதி என்னவாகுமோ என நினைத்து அவர்கள் ஒருவேளை அப்படிச் சொல்லலாம். மறுபட்சத்தில், சில கேள்விகள் அநேகரை ஆடிப்போகச் செய்கின்றன. அவையாவன: உலகையே ஒட்டுமொத்தமாய் அழிக்க வல்ல ஆயுதங்கள் எந்தெந்த நாடுகளின் கைவசம் உள்ளன? அவற்றையெல்லாம் அவை துணிந்து பயன்படுத்திவிடுமோ? அப்படிப் பயன்படுத்தினால் என்ன ஆகும்?
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், காலங்காலமாகவே போட்டி மனப்பான்மையும் அபிப்பிராய பேதமுமே அமைதியை நோக்கிச் செல்லும் பயணத்திற்குத் தடைக்கற்களாக இருந்திருக்கின்றன. அதே சமயத்தில் மதமோ, அந்தத் தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக தடுப்புச்சுவரை எழுப்பியிருக்கிறது. “மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் எதுவும் பகைமைக்கு வித்திடலாம்; அவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தும் வலிமைவாய்ந்த காரணிகளில் ஒன்றுதான் மதம்” என இதழாசிரியர் ஜேம்ஸ் ஏ. ஹாட் எழுதியுள்ளார். “மதம், மக்களை ‘நல்லவர்களாக’ ஆக்குகிறது என்ற பொதுவான கருத்து நிலவினாலும் அது சிலரைக் கொடூரமான செயல்களில் ஈடுபடத் தூண்டிவிடுகிறது என்பதே யாவரறிந்த உண்மை” என்கிறார் அவர். இதே கருத்தைத்தான் ஆசிரியர் ஸ்டீவன் வைன்பர்க்கும் தெரிவிக்கிறார். “நல்லவர்களும் கெட்டதைச் செய்வதற்குக் காரணமாய் இருப்பது மதமே” என அவர் சொல்கிறார்.
அப்படியானால், நமது உலகில் ஒற்றுமை என்றாவது மலருமா? நிச்சயமாக! ஆனால் மனிதனாலோ, மனிதன் ஏற்படுத்திய மதங்களாலோ அது சாத்தியமில்லை. இதைத்தான் அடுத்து நாம் பார்க்கப்போகிறோம்.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
இவ்வுலகம் வெடிக்கத் தயாராக உள்ள எறிகுண்டு போல் இருக்கிறதா?