இயேசுவிடம் சொந்தமாக பைபிள் இருந்ததா?
இ ல்லை. ஏன்? ஏனெனில், இன்று நம்மிடம் இருப்பதுபோன்ற முழு பைபிள் இயேசுவின் காலத்தில் இருக்கவில்லை. இருந்தாலும், சுருள்களின் தொகுப்புகள் ஜெப ஆலயங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலுள்ள விஷயங்கள் இன்று நம்மிடமுள்ள பைபிளில் பதிவாகியுள்ளன. உதாரணத்திற்கு, நாசரேத்தின் ஜெப ஆலயத்தில் ஏசாயாவின் சுருளை இயேசு வாசித்தார். (லூக்கா 4:16, 17) பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவில், ‘நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன ஆகமமும் வாசிக்கப்பட்டதை’ பவுல் கேட்டார். (அப்போஸ்தலர் 13:14, 15) அதோடு, ‘மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள் தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டதாக’ சீஷனாகிய யாக்கோபும் கூறினார்.—அப்போஸ்தலர் 15:21.
முதல் நூற்றாண்டில் இருந்தவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக பரிசுத்த வேதாகமத்தின் சுருள்களை வைத்திருந்தார்களா? ராஜஸ்திரீயாகிய கந்தாகேயின் அரண்மனையில் சேவை செய்த எத்தியோப்பிய மந்திரி அவற்றை வைத்திருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், காசா பட்டணத்திற்குப் போகிற சாலையில் சீஷனாகிய பிலிப்பு அவரைச் சந்தித்தபோது அவர் ‘தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தார்.’ (அப்போஸ்தலர் 8:26-30) “புஸ்தகங்களையும் [அதாவது, சுருள்களையும்], விசேஷமாய்த் தோற்சுருள்களையும்” எடுத்துவரும்படி அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். (2 தீமோத்தேயு 4:13) எந்தச் சுருள்கள் என்று பவுல் குறிப்பிடவில்லை என்றாலும் அவை எபிரெய வேதாகமத்தின் பாகங்களாகவே இருக்கவேண்டும்.
செமிட்டிக் மொழிகளின் பேராசிரியரான ஆலன் மிலர்ட் என்பவரின் கருத்துபடி, “பாலஸ்தீனாவில், செல்வாக்குள்ள [யூதர்கள்] மட்டுமே அதாவது, கல்விமான்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள், சில பரிசேயர்கள் மற்றும் நிக்கொதேமு போன்ற போதகர்கள்” மட்டுமே தங்களுக்கென்று சொந்தமாக வேதாகம சுருள்களை வைத்திருந்திருக்கலாம். அதற்கு ஒரு காரணம், அவற்றின் விலை மிக அதிகமாக இருந்தது. மிலர்டின் கணக்குபடி “ஏசாயாவின் சுருளின் விலை மட்டுமே ஆறு முதல் பத்து தினாரிகள்” இருக்கலாம். அப்படியென்றால், முழு எபிரெய பைபிளையும் வாங்குவதற்கு ஒரு வருட சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதி போய்விடலாம். ஏனெனில், “அதை உள்ளடக்குவதற்கு சுமார் 15-லிருந்து 20 சுருள்கள்வரை” தேவைப்படலாம் என மிலர்ட் சொல்கிறார்.
இயேசுவோ அவருடைய சீஷர்களோ தங்களுக்கென்று சொந்தமாக வேதாகம சுருள்களை வைத்திருந்ததாக பைபிள் சொல்வதில்லை. இருந்தாலும், இயேசுவுக்கு வேதவசனங்கள் அனைத்தும் அத்துப்படியாக இருந்தன என்பதில் சந்தேகமே இல்லை; அவரால் வசனங்களை மேற்கோள் காட்டவும் மனப்பாடமாக சொல்லவும் முடிந்தது. (மத்தேயு 4:4, 7, 10; 19:4, 5) ஆனால், இன்று பைபிள் பரவலாக கிடைப்பதோடு, நம்மால் விலை கொடுத்து வாங்கவும் முடிகிறது. அப்படியிருக்க, நாம் பைபிளை இன்னும் எவ்வளவு நன்றாக தெரிந்துவைத்திருக்க வேண்டும்?